ஸ்டாலின் - விஜயகாந்த் சந்திப்பு பின்னணி! உண்மை நிலவரத்தை போட்டுடைத்த பிரேமலதா

தனிப்பட்ட முறையில் எங்களுக்கும், திமுகவுக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை

தனிப்பட்ட முறையில் எங்களுக்கும், திமுகவுக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
திமுக - தேமுதிக கூட்டணி

தமிழகத்தில் மூன்றாவது அணி உருவாக வாய்ப்பில்லை என்றும், ஸ்டாலினுடன் அரசியல் குறித்தும் பேசப்பட்டுள்ளது என்றும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்திருக்கிறார்.

Advertisment

நாட்டின் மற்ற இடங்களில் மக்களவை தேர்தலை முன்னிட்டு, கூட்டணி வியூகங்கள் அமைக்கப்பட, தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளும் மக்களவை தேர்தல் + 21 சட்டமன்ற இடைத் தேர்தலை டார்கெட் செய்தே கூட்டணி வியூகங்கள் அமைத்து வருகின்றன. அதனால் தான், மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்த பாமக, இடைத் தேர்தலிலும் அதிமுகவுக்கு முழு ஆதரவு அளிக்க வேண்டும் என ஒப்பந்தம் போடப்பட்டது,

கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் தேமுதிகவை தங்கள் கூட்டணியில் சேர்க்க போட்டா போட்டி நடந்தது. ஆனால், ரிசல்ட் என்னவோ ஜீரோவாக இருந்தாலும், தற்போது மக்களவை தேர்தலிலும், தேமுதிகவை இழுக்க திமுக, அதிமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது.

ஒருவாரத்திற்கும் மேலாக வெளிப்படையாக அதிமுக, தேமுதிகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், தொகுதிப் பங்கீடு சிக்கல் காரணமாக இழுபறி நீடித்து வருகிறது. இந்தச் சூழ்நிலையில் தான், கடந்த 21ம் தேதி திமுக கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருநாவுக்கரசர், விஜயகாந்தை அவர் வீட்டுக்கே நேரடியாக சென்று சந்தித்தார். இதில், அரசியல் குறித்தும் விவாதிக்கப்பட்டது என்று தெரிவித்த திருநாவுக்கரசர், 'நாட்டின் நலன் கருதி நல்ல முடிவு எடுக்க வேண்டும்' என கேட்டுக் கொண்டதாக தெரிவித்தார்.

Advertisment
Advertisements

அதற்கு மறுநாளே, ரஜினிகாந்த், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் விஜயகாந்தை அவர் வீட்டிற்கு சென்று சந்தித்தனர். ரஜினியின் சந்திப்பு முழுக்க முழுக்க நட்பு அடிப்படையிலானது என்றாலும், ஸ்டாலின் சந்தித்தது அரசியல் நகர்வாகவே பார்க்கப்பட்டது.

ஸ்டாலினும், 'நாங்கள் அரசியல் பேசவில்லை. அவர் உடல் நலத்தை விசாரிக்கவே வந்தேன். அவர் நல்ல உடல் நலத்துடன் இருந்து, தொடர்ந்து மக்களுக்கு சேவையாற்ற வேண்டும்' என்று கூறிவிட்டுச் சென்றார்.

இந்தச் சூழ்நிலையில், கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு வழங்கும் நிகழ்ச்சி இன்று காலை தொடங்கியது. கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் விருப்ப மனு வினியோகம் செய்து தொடங்கி வைத்தார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதாவிடம், 'அதிமுக அல்லது திமுக கூட்டணியில் தேமுதிக இணைய வாய்ப்புள்ளதா?' என்று எழுப்பப்பட்டது.

அதற்கு, "மக்களவை தேர்தலில் போட்டியிட முதல் நாளில் 300க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு பெற்றுள்ளனர். தேமுகவின் பலம் என்ன என்பது எங்களுக்கு நன்றாக தெரியும். எந்த கட்சியுடன் கூட்டணி என்பது குறித்து இதுவரை முடிவு செய்யவில்லை. தேமுதிகவின் வாக்கு சதவீதம் மக்களுக்கு தெரியும். அதற்குரிய கவுரவம் அளிக்கப்படும் என்று நம்புகிறோம். உரிய இடங்கள் கிடைத்தால் மட்டுமே நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைக்கப்படும்.

தேமுதிகவின் பலத்துக்கேற்ற கட்சியுடன் கூட்டணி அமைக்கும். தேமுதிக தலைவர் விஜயகாந்தை திமுக தலைவர் ஸ்டாலின் சந்தித்து நலம் விசாரித்ததற்கு தேமுதிக சார்பில் நன்றி. ஸ்டாலின் சந்தித்ததில் நலம் விசாரிப்பு மட்டுமல்ல, அரசியலும் பேசப்பட்டுள்ளது. தனிப்பட்ட முறையில் எங்களுக்கும், திமுகவுக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை .

தேமுதிகவுடன் கூட்டணி வைக்க தமிழகத்திலுள்ள பெரிய கட்சிகள் முயற்சித்து வருகின்றன. 3-வது அணி உருவாக வாய்ப்பில்லை. ஒரு கட்சியை விமர்சித்ததால், அந்த கட்சியுடன் கூட்டணி கிடையாது என்பது இல்லை. அரசியலுக்கு என்று ஒரு வியூகம் உள்ளது. கடந்த ஒரு தேர்தலை மட்டும் வைத்து தேமுதிகவின் பலத்தை கணித்து விடக்கூடாது, மக்களவை தேர்தலில் தேமுதிக பலத்தை நிரூபிக்கும்" என்று தெரிவித்து உள்ளார்.

பிரேமலதாவின் இந்த பேட்டியின் மூலம், ஸ்டாலின் விஜயகாந்திடம் கூட்டணி குறித்து பேசியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேசமயம், மூன்றாவது அணி உருவாக வாய்ப்பில்லை என பிரேமலதா கூறியதை வைத்துப் பார்க்கும் பொழுது, நிச்சயம் திமுக அல்லது அதிமுக கூட்டணியில் தேமுதிக சங்கமிக்கும் என்பதும் தெளிவாகிறது.

Mk Stalin Dmdk Premalatha Vijayakanth

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: