Premalatha-vijayakanth | dmdk | vijayakanth: தேசிய முற்போக்கு திராவிட கழகம் (தே.மு.தி.க) தலைவரும் நடிகருமான விஜயகாந்த், உடல் நலக்குறைவு காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை பின்னடைவு ஏற்பட்டதாக வதந்திகள் பரவின.
எனினும், தே.மு.தி.க பொருளாளரும் விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா விஜயகாந்த் நலமாக இருப்பதாக கூறினார். அதன்படியே, விஜயகாந்த் உடல் நலம் பெற்றதையடுத்து கடந்த வாரம் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
பொதுச்செயலாளராக பிரேமலதா
இந்த நிலையில், சென்னை திருவேற்காட்டில் தே.மு.தி.க-வின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. மருத்துவ சிகிச்சைக்கு பின் முதன் முறையாக கட்சி நிகழ்ச்சியில் விஜயகாந்த் பங்கேற்றார். விஜயகாந்தை பார்த்ததும் தொண்டர்கள் கரகோஷம் எழுப்பி ஆரவாரம் செய்தனர்.
இந்த கூட்டத்தில் கட்சியின் பொருளாளர் பிரேமலதா, துணை செயலாளர் பார்த்தசாரதி மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
பொதுக்குழுவில் மொத்தம் 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தே.மு.தி.க. பொதுச்செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் நியமனம் செய்யப்பட்டார். பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து முடிவெடுக்க விஜயகாந்திற்கு முழு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
2011 சட்டமன்றத் தேர்தலில் தே.மு.தி.க-வுக்காக பரப்புரை மேற்கொண்ட பிரேமலதா விஜயகாந்த் 2018ல் பொருளாளர் ஆனார். தற்போது பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். விஜயகாந்த் கட்சியின் நிறுவனத் தலைவராக மட்டும் தொடர்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“