/indian-express-tamil/media/media_files/2025/10/07/premalatha-vijayakanth-mother-2025-10-07-12-06-08.jpg)
Premalatha Vijayakanth mother Amsaveni passed away
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அக்கட்சியின் பொருளாளர் எல்.கே. சுதீஷ் ஆகியோரின் தாயாரான அம்சவேணி (வயது 83), இன்று (அக்டோபர் 7, செவ்வாய்க்கிழமை) காலமானார்.
கடந்த சில நாட்களாக வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவால், அம்சவேணி சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலை 7.30 மணியளவில் உயிர் பிரிந்ததாக எல்.கே. சுதீஷ் தெரிவித்துள்ளார்.
மறைந்த அம்சவேணிக்கு, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், புதுச்சேரி ராமச்சந்திரா மருத்துவமனை தலைவர் ராதா ராமச்சந்திரன் ஆகிய மகள்களும், தேமுதிக பொருளாளர் எல்.கே. சுதீஷ் என்ற மகனும் உள்ளனர்.
தற்போது, அம்சவேணியின் உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள எல்.கே. சுதீஷின் இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
தாயாரின் உடல்நிலை காரணமாக, கடைசியாக அவர் கலந்துகொள்ளவிருந்த ஈரோடு மாவட்டப் பூத் முகவர்கள் கூட்டத்தை ரத்து செய்துவிட்டு, பிரேமலதா விஜயகாந்த் மற்றும் எல்.கே. சுதீஷ் ஆகியோர் அவசரமாகச் சென்னைக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.
அம்சவேணியின் இறுதிச்சடங்குகள் நாளை (அக்டோபர் 8) மதியம் 1 மணியளவில் அவரது விருகம்பாக்கம் இல்லத்தில் நடத்தப்பட்டு, பின்னர் வடபழனி ஏவிஎம் மின்மயானத்தில் தகனம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்தின் தாயார் மறைவுக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "தே.மு.தி.க பொதுச் செயலாளர் சகோதரி பிரேமலதா விஜயகாந்த் அவர்களுடைய தாயார் அம்சவேணி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். பெற்றெடுத்து அன்பு செலுத்தி வளர்த்த அன்னையை இழந்து வாடும் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் தே.மு.தி.க.வின் பொருளாளர் எல்.கே.சுதீஷ் உள்ளிட்ட அவர்களது குடும்பத்தினர் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்," என்று கூறியுள்ளார்.
அம்சவேணியின் மறைவுக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.