தமிழ்நாட்டில் ஜனநாயகம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளதால் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக தே.மு.தி.க தெரிவித்துள்ளது
விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த நா.புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி திடீர் உடல்நலக் குறைவால் மரணமடைந்தார். இதனால் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதையடுத்து, அரசியல் கட்சிகள் இடைத்தேர்தலில் போட்டியிடும் தங்கள் கட்சி வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. அந்த வகையில் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிக்கப்பட்டுள்ளார். நாம் தமிழர் வேட்பாளராக டாக்டர் அபிநயா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பா.ஜ.க கூட்டணியில் பா.ம.க வேட்பாளராக சி.அன்புமணி அறிவிக்கப்பட்டுள்ளார்.
அதேநேரம் அ.தி.மு.க இடைத்தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்தது. இந்தநிலையில், தற்போது அ.தி.மு.க.,வைத் தொடர்ந்து தே.மு.தி.க.,வும் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தே.மு.தி.க வெளியிட்டுள்ள அறிக்கையில், “2024ம் ஆண்டு நடக்க இருக்கும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை தேசிய முற்போக்கு திராவிட கழகம் புறக்கணிக்கிறது. இதுவரை தமிழகத்தில் நடந்த அனைத்து இடைத்தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல்களில் போட்டியிட்ட தே.மு.தி.க விக்கிரவாண்டி தேர்தலை புறக்கணிக்கிறது. காரணம் தேர்தல்கள் என்பது ஜனநாயக ரீதியாக நேர்மையாக நடக்கவேண்டியவை. இன்றைய கால கட்டத்தில் ஆட்சியாளர்களின் அதிகாரத்தால் தேர்தல்கள் தவறாக நடத்தப்படுகின்றன.
இந்த இடைத்தேர்தல் மீது நம்பிக்கை இல்லாத காரணத்தால் உழைப்பு, நேரம், பணம் அனைத்தையும் விரயம் செய்ய விரும்பவில்லை. எங்கள் தொண்டர்களின் உழைப்பை வீணடிக்க விரும்பாத காரணத்தால் தே.மு.தி.க இந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிக்கிறது. இன்றைய ஆட்சியர்களின் கரங்களில் தேர்தல் என்கிற ஜனநாயகம் மிகப்பெரிய கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.
ஜனநாயக நாட்டில் நாம் வாழ்கிறோம் என்று நாம் பெருமையாகச் சொல்லிக் கொண்டாலும் ஜனநாயகம் என்பது இன்றைக்குக் கேள்விக் குறியாக்கப்பட்டது என்பதை ஓட்டு மொத்த மக்களும், கட்சியினரும் அறிவர். எனவே இந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலை தேசிய முற்போக்கு திராவிட கழகம் புறக்கணிக்கிறது.” இவ்வாறு தே.மு.தி.க அறிக்கை வெளியிட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“