நடக்கவிருக்கும் ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடப்போவதாக பிரேமலதா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: ”கூட்டம் தொடங்கியதும் திருமுருகன் ஈவிகேஎஸ்-க்கு இரங்கல் தெரிவித்துள்ளோம். சிறிய வயதில் அவருக்கு இப்படி நடந்திருக்ககூடாது. அவரது மறைவை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர் இறந்து அதிக நாட்கள் ஆகவில்லை. ஆனால் அதற்குள் இடைத் தேர்தல் அறிவித்திருக்கிறார்கள். ஒரு மனிதாபிமான அடிப்படையில் மூன்று மாதம் கழித்து இடைத் தேர்தல் நடத்தலாம். அரசியலில் எல்லா சூழலும் நிகழலாம். இந்த முறை தேமுதிக தனியாக போட்டியிட உள்ளது. பாஜக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. அதிமுக 4 அணிகளாக பிரிந்து இருக்கிறார்கள். அவர்களுக்கு சின்னம் இருக்கிறதா என்று தெரியவில்லை. பண பலம், ஆட்சி பலம், அதிகார பலத்தை எதிர்த்து ஒரு நல்ல வேட்பாளரை போட்டியிட தேர்வு செய்துள்ளோம். மக்கள் போற்றும் ஒரே தலைவர் கேப்டன் விஜயகாந்த்தான் . எங்கள் கட்சியை விட்டு சென்றவர்களைப் பற்றி கவலையில்லை.
தொலைப்பேசி மூலம் அதிமுகவின் இ.பி.எஸ் அணி, ஓ.பி.எஸ் அணி, அண்ணாமலை எல்லோரும் தொலை பேசியில் தொடர்பு கொண்டு, உங்களை சந்திக்க வர வேண்டும் நேரம் தாருங்கள் என்றுதான் கேட்கிறார்கள். இந்த முறை நாங்கள் எங்கள் வேட்பாளரான ஆனந்தை முதலில் களம் இறக்கி இருக்கிறோம் என்பதால், பாஜக, அதிமுகவின் இரண்டு அணி, ஜி.கே வாசன் ஆகியோரிடம் நாங்கள் ஆதரவு கேட்கிறோம். ஈரோடு கிழக்கு தொகுதியில் விஜய் பிரபாகர் எப்படி போட்டியிடுவார்? அதற்கு வாய்ப்பில்லை. மார் 2 ம் தேதி தேர்தல் முடிவுகள் உங்கள் கேள்விக்கு பதில் அளிக்கும். இடைத் தேர்தல் முடிந்தவுடன். மார்ச் மாதத்தில் செயற்குழு, பொதுக்குழு கூடும். என்று பிரச்சாரம் தொடங்கிறோம் என்பதை கூடிய விரைவில் அறிவிக்கிறோம்.” என்று அவர் கூறினார்.