ராமநாதபுரம் மாவட்டத்தில் கோயில்களுக்கும் சுற்றுலாத்தலங்களுக்கும் ஏராளமான மக்கள் வருவதால் விமான நிலையம் அமைக்கப்படுவதை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி கேள்வி எழுப்பினார். அதனை அமைக்க ஒன்றிய அரசு விரைந்து முன்வருமா உள்ளிட்ட கேள்விகளை எழுப்பினார்.

இதற்கு, விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் டாக்டர் வி. கே. சிங் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். அதில், ராமநாதபுரத்தில் செயல்பட்டு வரும் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள விமான நிலையம் இயக்க தகுதி வாய்ந்ததாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது என்று கூறியுள்ளார்.
மேலும், “ராமநாதபுரத்தில் கடலோர காவல்படைக்கு சொந்தமான விமான தளம், ‘உடான்’ திட்டத்தில் தேர்வாகியுள்ளது; விமான நிலையம் தயாராகி 2 மாதங்களுக்குள் விமான சேவைக்கு அரசால் அனுமதி வழங்கப்படும்”, என்று எம்.பி., நவாஸ் கனி எழுப்பிய கேள்விக்கு விமான போக்குவரத்துத்துறை எழுத்துப்பூர்வ பதில் அளித்துள்ளது.