Advertisment

இந்திய மீனவர்களுக்கு இலங்கை கடற்பகுதிக்குள் அனுமதியில்லை - அதிபர் அநுர குமார திசாநாயக்க திட்டவட்டம்

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பகுதிக்குள் சட்டவிரோதமாக நுழைவதை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோமென அந்நாட்டு அதிபர் அநுர குமார திசாநாயக்க திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
SL President

இலங்கை கடற்பகுதிக்குள் இந்திய மீனவர்கள் சட்டவிரோதமாக நுழைவதை அனுமதிக்க மாட்டோம் என அந்நாட்டின் அதிபர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

Advertisment

நவம்பர் 14-ஆம் தேதி இலங்கையில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதை தொடர்ந்து, ஜஃப்னா பகுதியில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இதில் இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்க உரையாற்றினார். இக்கூட்டத்தில் அவரது உரைக்கு மக்களிடையே பலத்த கரகோஷம் மற்றும் வரவேற்பு காணப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் வசிக்கும் தமிழ் மக்கள், தொல்லியல் மற்றும் வனத்துறையினரால் வலுக்கட்டாயமாக கைப்பற்றப்பட்ட நிலங்களை மீட்பதற்கு போராடி வருவது குறிப்பிடத்தக்கது.

இக்கூட்டத்தில் பேசிய இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்க, செயல்பாடின்றி இருக்கும் மாகாண மற்றும் உள்ளாட்சி தேர்தல்கள் விரைவில் நடத்தப்படுமென தெரிவித்தார். “குறிப்பிட்ட பகுதிகளில் மக்களால் தேந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் அவர்களை வழிநடத்துவார்கள்“ என அவர் கூறினார். அநுர குமார திசாநாயக்க அதிபராக பொறுப்பேற்ற பின்னர், தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் நடத்தப்பட்ட முதல் கூட்டத்தில் பல்வேறு அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். எனினும், தனது வாக்குறுதிகளில் குறிப்பிட்டிருந்ததை போன்று, தமிழர்களுக்கான அதிகாரப்பகிர்வு மற்றும் இனப்பிரச்சனைகளுக்கான நிரந்தர தீர்வு போன்றவை குறித்து அவர் குறிப்பிடவில்லை.

“ஜஃப்னாவில் நாங்கள் 27 ஆயிரம் வாக்குகள் மட்டுமே பெற்றோம். எங்கள் திட்டங்கள் குறித்து தமிழர்களிடம் சரியாக விளக்கம் அளிக்காததே இதற்கு காரணம். மேலும், தெற்கில் சிங்களர்கள் வசிக்கும் பகுதியில் நாங்கள் பணியாற்றியதை போன்று, இங்கு நாங்கள் செயலாற்றவில்லை. அந்த சூழல் தற்போது சீரமைக்கப்பட்டது“ என அவர் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார். 

“இங்கு அதிகளவிலான மக்கள் கூடியிருப்பது, நீங்கள் அரசு மீது நம்பிக்கை கொண்டுள்ளதை காண்பிக்கிறது. இனம் மற்றும் மத பேதமின்றி அனைத்து மக்களுக்கும் சமமான தேசத்தை உருவாக்குவேன். சிங்களர்கள் மற்றும் தமிழர்களுக்கு இடையேயான பிரச்சனைகளுக்கு கடந்த கால அரசியல்வாதிகள் தான் காரணம். நம் நாட்டில் அரசியல் கலாசாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு ஜஃப்னா பகுதி மக்களுக்கு அழைப்பு விடுக்கிறேன்“ என அவர் தெரிவித்துள்ளார்.

சுமார் 30 ஆண்டு கால போர், இலங்கையில் கண்ணீர் மற்றும் நேசத்திற்குரியவர்களின் இழப்புகளையே விட்டுச் சென்றதாக அநுர குமார திசாநாயக்க கூறியுள்ளார். “இனி போருக்கான சூழல் ஒருபோதும் உருவாகாது என நாங்கள் உறுதியளிக்கிறோம். இந்த அரசு அனைத்து தரப்பு மக்களுக்கானது என நம்பிக்கையை உருவாக்குவதற்கு கடினமாக உழைக்கும்“ எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

வேலைவாய்ப்பின்மை மற்றும் இளைஞர்களிடையே அதிகரித்து வரும் போதைப்பொருள் பழக்கம் தமிழர்களுக்கு கவலை அளிப்பதாகக் கூறிய அநுர குமார திசாநாயக்க, அப்பகுதிகளில் தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டு வேலைவாய்ப்பு வழங்கப்படும் எனவும், போதைப்பொருள்கள் முற்றிலுமாக ஒழிக்கப்படுமெனவும் உறுதியளித்துள்ளார். மேலும், விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு அரசு துணை நிற்கும் என அவர் தெரிவித்துள்ளார். “இலங்கை கடற்பகுதிக்குள் இந்திய மீனவர்கள் சட்டவிரோதமாக நுழைவதை அனுமதிக்க மாட்டோம். இதனால், இலங்கையின் கடல் வளம் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது“ என அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். 

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Srilanka India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment