ஃபீஞ்சல் புயல் எதிரொலியாக குடியரசு தலைவர் திரௌபதி முர்முவின் தமிழக சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளன.
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தற்போது தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக, வங்கக் கடலில் உருவாகியுள்ள ஃபீஞ்சல் புயல் நாளை பிற்பகல் கரையைக் கடக்கிறது. அப்போது, காற்று 90 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கனமழையின் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவின் தமிழக பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. முன்னதாக, நாளைய தினம் (நவ 30) திருச்சி மாவட்டத்திற்கு திரௌபதி முர்மு வருகை தர இருந்தார். இதைத் தொடர்ந்து, திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், மழையின் காரணமாக திரௌபதி முர்முவின் நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. எனினும், திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா வழக்கம் போல் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி - க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“