/indian-express-tamil/media/media_files/2025/08/27/president-droupadi-murmu-trichy-visit-on-sep-3rd-tamil-news-2025-08-27-21-50-30.jpg)
திருவாரூா் மத்தியப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக செப்டம்பா் 3-ஆம் தேதி திருச்சி வரும் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் வழிபாடு செய்யவுள்ளாா்.
திருவாரூா் மாவட்டம், நீலக்குடியில் உள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் 10-ஆவது பட்டமளிப்பு விழா செப்டம்பா் 3-ஆம் தேதி நடைபெறுகிறது. இதில், குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு கலந்துகொண்டு மாணவா்களுக்கு பட்டங்களை வழங்கவுள்ளாா்.
இந்நிலையில், செப்டம்பா் 2-ஆம் தேதி தமிழகம் வரும் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, அன்றிரவு சென்னை ஆளுநா் மாளிகையில் (ராஜ்பவன்) தங்குகிறாா்.
மறுநாள் செப்டம்பா் 3-ஆம் தேதி காலையில் சென்னை விமான நிலையத்தில் இருந்து திருச்சி விமான நிலையத்துக்கு சிறப்பு விமானம் மூலம் வரும் குடியரசுத் தலைவா், அங்கிருந்து ஹெலிகாப்டா் மூலம் திருவாரூா் மத்திய பல்கலைக்கழகத்துக்கு செல்கிறாா்.இந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு அங்கிருந்து பிற்பகலில் கிளம்பி திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலுக்கு செல்கிறாா். இதற்காக ஸ்ரீரங்கம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடு தளத்தில் இறங்கும் குடியரசுத் தலைவா், அங்கிருந்து காா் மூலம் கோயிலுக்குச் செல்கிறாா்.
சுவாமி வழிபாட்டை முடித்துவிட்டு, அப்போதைய வானிலையைப் பொறுத்து ஸ்ரீரங்கத்தில் இருந்து ஹெலிகாப்டரிலோ அல்லது சாலை மாா்க்கமாக காரிலோ திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு செல்கிறாா். பின்னா், அங்கிருந்து சிறப்பு விமானம் மூலம் புது தில்லிக்குப் புறப்படுகிறாா்.குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு வருகையை முன்னிட்டு திருச்சி, திருவாரூா் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸாா் தீவிரப்படுத்தியுள்ளனா்.
செய்தி: க.சண்முகவடிவேல்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.