/tamil-ie/media/media_files/uploads/2023/02/Murmu-latest.jpeg)
President Droupadi Murmu
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு 2 நாள் பயணமாக இன்று சென்னை வருகிறார்.
சென்னையில் உள்ள கடல்சார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை (அக். 27) நடைபெற இருக்கிறது. இதில் பங்கேற்பதற்காக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பெங்களூருவில் இருந்து இந்திய விமானப்படை தனிவிமானம் மூலம் இன்று மாலை 6 மணிக்கு சென்னை வருகிறார்.
விமான நிலையத்தில் அவரை ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் ஆகியோர் வரவேற்கின்றனர். அங்கிருந்து கிண்டி ஆளுநர் மாளிகைக்கு காரில் செல்லும் முர்மு, இன்று இரவு அங்கு தங்குகிறார்.
நாளை காலை 9 மணியில் இருந்து 9.30 மணி வரை, ஆளுநர் மாளிகையில் முக்கிய பிரமுகர்களை சந்திக்கிறார்.
தொடர்ந்து, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் 8-வதுபட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார். அங்கு, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி உரையாற்றுகிறார்.
பிற்பகல் 12.05 மணி அளவில் சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
குடியரசுத் தலைவர் வருகையை முன்னிட்டு சென்னை விமான நிலையம், கிண்டி ஆளுநர் மாளிகை, விழா நடைபெறும் கடல்சார் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே, ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தால், கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.