நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த நவம்பர் 2-ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியான ‘ஜெய்பீம்’ திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால், சில காட்சிகளில் வன்னியர் சமூதாயம் இழிவுபடுத்தப்பட்டிருக்கிறதாக சர்ச்சைகள் எழுந்தது. பாமகவினரும் பல இடங்களில் ஜெய்பீம் திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
Advertisment
இதுதொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சி இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்து கடிதம் எழுதியிருந்தார். தொடர்ந்து, நடிகர் சூர்யாவை எட்டி உதைத்தால் பரிசு, 5 கோடி ரூபாய் நஷ்டஈடு தர வேண்டும் என சர்ச்சைகள் தொடர்ந்த வண்ணம் இருந்தது.
இதையடுத்து, சூர்யாவுக்கு துப்பாக்கி எந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. சூர்யாவிற்கு ஆதரவாக கலைத்துறையினர் பலரும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். சமூக வலைதளத்தில் Westandwithsuriya என்ற ஹேஷ்டேக்கை ட்விட்டர் வாசிகள் ட்ரெண்ட் செய்து வந்தனர்.
இதற்கிடையில், ஜெய்பீம் திரைப்படத்துக்கு எந்த ஒரு விருதையும் மத்திய அரசு வழங்கக் கூடாது எனவும் வன்னியர் சங்கம் கடிதம் அனுப்பி இருந்தது.
சிதம்பரம் நீதிமன்றத்தில் வழக்கு
இந்நிலையில், சிதம்பரம் நீதிமன்றத்தில் வன்னியர் சங்கத்தின் தலைவர் பு.தா.அருள்மொழி ஜெய் பீம் படத்தின் நடிகர் சூர்யா, அவரது மனைவி ஜோதிகா, இயக்குநர் ஞானவேல், படத்தை வெளியிட்ட அமேசான் நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதில், அவதூறு பரப்பியது, இரு சமூகத்தினர் இடையே வன்முறை தூண்டுவது, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது ஆகிய பிரிவுகளின் கீழ் நடிகர் சூர்யா, ஜோதிகா, இயக்குநர் ஞானவேல் மற்றும் அமேசான் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த 20 நாள்களுக்கு மேலாக ஜெய் பீம் படத்தின் பிரச்சினை விவாத பொருளாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஜெய் பீம் படத்தால் சூர்யாவுக்கு ஏற்பட்ட சிக்கலுக்கு வருத்தம் தெரிவிப்பதாக படத்தின் இயக்குநர் ஞானவேல் அண்மையில் அறிக்கை வெளியிட்டிருந்தார். ஆண்டை குறிக்கும் வகையில் வைக்கப்பட்ட காலேண்டர், ஒரு சமூதாயத்தை குறிக்கும் என எதிர்பார்க்கவில்லை என கூறியிருந்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil