சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று சென்னை வருகிறார். இதனைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர்.
வேலூரில் உள்ள சி.எம்.சி மருத்துவமனையின் நூற்றாண்டு தொடக்க விழாவில் பங்கேற்க குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் விமானம் மூலம் இன்று காலை 10.45 மணிக்குச் சென்னை வந்தடைகிறார். சென்னை விமான நிலையம் வரும் இவர் தனி ஹெலிகாப்டர் மூலம் வேலூர் செல்கிறார். மருத்துவமனையின் நூற்றாண்டு தொடக்க விழாவிற்குப் பின்னர் நாராயணி மருத்துவமனையில் 10 கோடி ரூபாய் செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அதிநவீன இருதய அறுவை சிகிச்சை, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைப் பிரிவையும் தொடக்கி வைக்கிறார். இரண்டு நிகழ்ச்சிகளுக்குப் பிறகு ஹெலிகாப்டர் மூலம் வேலூரில் உள்ள ஸ்ரீபுரம் தங்கக் கோவிலுக்கும் செல்ல உள்ளார்.
,
வேலூரில் இந்த நிகழ்ச்சிகளை முடித்த பின்னர் அதே ஹெலிகாப்டரில் மாலை 5.40 மணிக்கு மீண்டும் சென்னை வருகிறார். சென்னை விமான நிலையத்தில் இருந்து சாலை வழியாகக் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்குச் செல்கிறார். இரண்டு நாள் பயணமாக வந்திருக்கும் அவர் ஆங்கேயே தங்க உள்ளார். நாளை சென்னை பல்கலைக்கழகத்தின் 160-வது பட்டமளிப்பு விழா, வேளச்சேரி குருநானக் கல்லூரியில் குரு அமர் தாஸ் மற்றும் சாகித் பாபா தீப் சிங் கட்டிட அரங்குகள் திறப்பு விழாவில் பங்கேற்கிறார்.
,
இந்த நிகழ்வுகள் முடிவடைந்த பின்னர் நாளை மதியம் 1.15 மணிக்கு தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு மாலை 4.10 மணிக்கு சென்றடைவார் என்று தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளது. குடியரசு தலைவரின் வருகையையொட்டி சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பும் நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களில் 5 அடுக்கு பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது. இதனால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.