Advertisment

'பெண் நிருபரை ஸ்டாலின், இ.பி.எஸ் கூட இப்படி பேசியது இல்லை': அண்ணாமலைக்கு பிரஸ் கிளப், காங்கிரஸ் கண்டனம்

மாநிலத் தலைவர் பதவி இல்லையென்றாலும் பா.ஜ.க-வில் தொடர்வீர்களா என்று கேள்வி எழுப்பிய பெண் நிருபரை, அவமதிக்கும் விதமாக நடந்துகொண்ட பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு கோவை பிரஸ் கிளப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
kaka

கேள்வி கேட்ட பெண் நிருபரை, அவமதிக்கும் விதமாக நடந்துகொண்ட பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு கோவை பிரஸ் கிளப் கடும் கண்டனம்

மாநிலத் தலைவர் பதவி இல்லையென்றாலும் பா.ஜ.க-வில் தொடர்வீர்களா என்று கேள்வி எழுப்பிய பெண் நிருபரை, அவமதிக்கும் விதமாக நடந்துகொண்ட தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு கோவை பிரஸ் கிளப் மற்றும் காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Advertisment

பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா குறித்து விமர்சனம் செய்தது பெரும் சர்ச்சையானது. அண்ணாமலையின் பேச்சுக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த அ.தி.மு.க தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, அ.தி.மு.க தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறியது. 

அறிஞர் அண்ணா குறித்து அண்ணாமலையின் பேச்சுதான் அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி முறிவுக்கு காரணம் என்று அ.தி.மு.க அறிவித்தது. தமிழ்நாட்டில் பா.ஜ.க கூட்டணியில் இருந்த பெரிய கட்சியான அ.தி.மு.க வெளியேறியடு பா.ஜ.க-வுக்கு இழப்பு என்று அரசியல் விவாதங்களில் பேசப்பட்டது.

இந்நிலையில், பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கோவையில் என் மண், என் மக்கள் யாத்திரையில் ஈடுபட்டிருந்தார். அப்போது, பா.ஜ.க தலைமை அண்ணாமலையை டெல்லிக்கு அழைத்ததை அடுத்து அவர் நேற்று டெல்லி சென்றார்.

முன்னதாக, அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். செய்தியாளர்கள் சந்திப்பின்போது பெண் நிருபர்,  “பாஜக தலைவர் பதவியில் இருந்து உங்களை நீக்கிவிட்டால் நீங்கள் கட்சியில் இருப்பீர்களா?” என்று கேள்வி எழுப்பினார். இந்தக் கேள்வியால் கோபமடைந்த அண்ணாமலை,  “நீங்க இங்க வாங்க சிஸ்டர். இப்படி அறிவாளித்தனமான கேள்வியை கேட்ட உங்கள் முகத்தை தமிழக மக்கள் பார்க்கட்டும். இங்க வாங்க. இப்படி ஒரு அறிவுப்பூர்வமான கேள்வியை கேட்டவரை 8 கோடி பேர் பார்க்கணும். நான் சொல்றதுல என்ன தவறு இருக்கு?” என்று கூறினார்.

​இதற்கு  அங்கிருந்த நிருபர்கள், அண்ணாமலையிடம், “சார் கேள்வி கேட்டால் பதில் சொல்லுங்கள். அதை விட்டுவிட்டு நிருபரிடம் இப்படியெல்லாம் நீங்கள் பேசுவது சரியல்ல” என்ற தங்கள் அதிருப்தியை தெரிவித்தனர். அதற்கு பதிலளித்த அண்ணாமலை,  “கேள்வி கேட்பதற்கு ஒரு மரபு இருக்கு... அந்த மரபை தாண்டிட்டீங்கனா யாராக இருந்தாலும் அண்ணாமலை விட மாட்டான். இந்தக் கேள்வியை எப்படி நீங்க நியாயப்படுத்துவீங்க? நான் இன்றும் விவசாயம் பார்த்துக் கொண்டிருக்கிறேன். தலைவர் சீட்டில் நான் பசை போட்டா உட்கார்ந்திருக்கிறேன். விவசாயம் என்பதுதான் எனது முதல் அடையாளம். அதற்கு பிறகுதான் அரசியல்வாதி என்கிற அடையாளம்.” என்று கூறினார்.

கேள்வி கேட்ட பெண் நிருபரை மிரட்டும் விதமாக, அவரை அவமதிக்கும் விதமாக பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை நடந்து கொண்டதற்கு கோவை பிரஸ் கிளப், மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம், காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

அண்ணாமலையின் செயலுக்கு கோவை பிரஸ் கிளப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

“பத்திரிகை நெறிமுறைகளை போதிக்கும் முன் அண்ணாமலை, தலைவர் என்ற நெறிமுறைகளை கற்று, மரியாதையுடன் செயல்பட வேண்டும். குடிமக்களுக்கும், பொது வாழ்வில் இருப்பவர்களுக்கும் இடையே, பத்திரிகை பாலமாக உள்ளது” என, கோவை பிரஸ் கிளப் தலைவர் ஏ.ஆர். பாபு கூறினார்.

பெண் நிருபரை அவமதிக்கும் விதமாகப் பேசிய தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த லக்ஷ்மி ராமச்சந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த லக்ஷ்மி ராமச்சந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில்,  “இதுபோன்ற ஆணவத்தை நான் யாரிடமும் பார்த்ததில்லை... செல்வி ஜெயலலிதா, மோடி அல்லது அமித்ஷாவிடம் கூட இல்லை. இந்த மனிதர் தன்னை மனிதகுலத்திற்கு கடவுள் கொடுத்த பரிசு என்று நினைக்கிறார்” என்று கடுமையாக சாடியுள்ளார்.

மேலும், “ஒரு பெண் நிருபரிடம் அண்ணாமலை பேசியது போல், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அல்லது எடப்பாடி பழனிசாமி உட்பட எந்த அரசியல்வாதியும் பேசிவிட்டு தப்பித்துவிட முடியுமா?” என்று  லக்ஷ்மி ராமச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் அண்ணாமலைக்கு கண்டனம் தெரிவித்து உள்ளது. 

மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “பெண் பத்திரிகையாளரிடம் கீழ்த்தரமாக நடந்துகொண்ட அண்ணாமலையை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. ஊடக நிறுவனங்கள் இனியும் மௌனம் காக்காமல் அண்ணாமலையின் செய்தியாளர் சந்திப்புகளை புறக்கணிக்க வேண்டும் என்று மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் வலியுறுத்துகிறது.

கோயம்புத்தூர் விமான நிலையத்தில் (01.02.2023) பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பத்திரிகையாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது "மாநிலத் தலைவராக இல்லை என்றால் பா.ஜ.க-வில் தொடர்ந்து செயல்பட வாய்ப்பிருக்கிறதா?" என்ற கேள்வியை பெண் பத்திரிகையாளர் ஒருவர் முன்வைத்தார். உடனே அந்த பெண் பத்திரிகையாளரை, தனக்கு அருகில் வந்து நிற்கும் படி அழைத்ததன் மூலம் தரம் கெட்ட, கீழ்த்தரமான, மூன்றாம்தர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் அண்ணாமலை. இந்த கேள்வி எந்த வகையிலும் அறம் தவறிய கேள்வியோ, ஒரு தனி நபரின் அந்தரங்க வாழ்க்கை குறித்த கேள்வியோ, ஒரு அரசியல் கட்சித் தலைவரின் குடும்ப விவகாரம் தொடர்பான கேள்வியோ, கேட்கவே கூடாத அல்லது கேட்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லாத கேள்வியோ கிடையாது. 

அண்ணாமலை பா.ஜ.க-வின் தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொண்டது தொடங்கியே அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு தொடங்கி, கட்சியின் மூத்த தலைவர்களையும், கூட்டணி கட்சித் தலைவர்களையும் மதிக்காமல் செயல்படுகிறார் என்றும், கொடூரமான குற்றப் பின்னணியைக் கொண்டவர்களை கட்சியில் சேர்க்கிறார் என்றும், பெண்களை பயன்படுத்தி கட்சியில் தனது பொறுப்பை காப்பாற்றிக் கொள்கிறார் என்பது வரையிலான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருகின்றன. 

இதைத் தொடர்ந்து அண்ணாமலை மாநிலத் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கப்படலாம் என்ற தகவல் அரசியல் வட்டாரத்தில் அவ்வப்போது உலவி வந்துள்ளது. இந்நிலையில், அறிஞர் அண்ணா குறித்து அண்ணாமலை அளந்துவிட்ட பொய், அதிமுகவை கோபப்படுத்தியதும், அதைத் தொடர்ந்து பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து அ.தி.மு.க வெளியேறியதையும் நாம் அறிவோம். 

ஆகவே, அண்ணாமலையின் இந்த நடவடிக்கையால், அவர் மாநிலத் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கப்படலாம் என்ற செய்தி மீண்டும் அரசியல் வட்டாரத்தில் உலாவரத் தொடங்கியுள்ளது. 
இப்படிப்பட்ட நிலையில்தான் தனது நடைபயணத்திற்கு இடையில் அண்ணாமலை டெல்லி புறப்பட்டுள்ளார். இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது ஒருவேளை பா.ஜ.க தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டால் கட்சியில் நீடிப்பீர்களா என்ற கேள்வியை அண்ணாமலையிடம் கேட்பது எந்த வகையிலும் நெறி தவறிய அல்லது தொடர்பற்ற கேள்வியாக கருத முடியாது. ஆகவே, அந்த பெண் பத்திரிகையாளர் எழுப்பிய கேள்வியில் எந்த தவறும் இல்லை. அது மிக மிக சரியான ஒரு கேள்வியே. 

அண்ணாமலையை பொறுத்தவரை, பத்திரிகையாளர்கள் எழுப்பும் நியாயமான கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் வசமாக சிக்கிக்கொள்ளும் பட்சத்தில் அதை எவ்வாறு சமாளிப்பது என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல், கேள்வி கேட்ட பத்திரிகையாளரை நோக்கி  “நீங்கள் எந்த பத்திரிகையை சேர்ந்தவர்? உங்கள் பெயர் என்ன? உங்களுக்கு கேள்வி கேட்க தெரியவில்லை” என்பது போன்ற தரம்கெட்ட செயலில் ஈடுபட்டு தப்பிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். 

தமிழ்நாடு அரசியல் களம் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களை பார்த்துள்ளது. ஆனால், பத்திரிகையாளர்கள் எழுப்பும் கேள்விக்கு கூட பதில் சொல்லத் தெரியாமல், இப்படி மூன்றாம் தர நடவடிக்கையில் ஈடுபட்ட எந்த ஒரு தலைவரையும் தமிழ்நாடு இதற்கு முன் சந்தித்ததில்லை. பா.ஜ.க கட்சி அலுவலகத்திற்கு நேரடியாக சென்று மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் சார்பாக "உங்களைப் போல் ஒரு அரசியல்வாதியை நாங்கள் இதுவரை பார்த்ததில்லை" என்று அண்ணாமலையிடம் நேரடியாகவே தெரிவித்துள்ளோம். ஆனாலும், அண்ணாமலை திருந்தவில்லை. 

அதே சமயத்தில், பத்திரிகையாளர்களிடம் தொடர்ந்து கீழ்த்தரமாக நடந்துகொள்ளும் அண்ணாமலையை ஊடக மற்றும் பத்திரிகை நிறுவனங்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Annamalai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment