Tamil Nadu News: தமிழகத்தின் தலைநகரமான சென்னைக்கு இரண்டாவது விமான நிலையத்தை பரந்தூரில் அமைக்க அரசு முடிவெடுத்துள்ளது. ஆனால் அதற்கு மக்களினிடையே பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது.
இதற்கு பதில் கூறும் விதமாக தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது, "சென்னையிலிருந்து 65 கி.மி. தொலைவில் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை ஒட்டி 4 கி.மி. தூரத்தில் இந்த புதிய விமானம் அமையவிருக்கிறது. இந்த திட்டத்தின் முதல் கட்டமாக அங்கிருக்கும் நிலங்களை எடுப்பதற்கு அரசின் சார்பாக சென்றோம்.
குறிப்பாக, இதற்காக அமைச்சர் தங்கம் தென்னரசு, செங்கல்பட்டு மாவட்டத்தின் அமைச்சர் அன்பரசு ஆகியோர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுடன் நாங்கள் காஞ்சிபுரத்திற்கு சென்றோம். அங்கு மாவட்ட ஆட்சியரின் அலுவலகத்தில், குறிப்பிட்ட 13 கிராமத்தைச் சார்ந்த விவசாய குடியிருப்பு வாசிகளை அழைத்து பேசினோம்.
அப்போது அவர்கள் எங்களிடம் முறையிட்டதாவது:
- அவர்களுடைய நிலத்தை விமான நிலையத்திற்கு கொடுப்பதனால், அந்நிலத்திற்கு அரசாங்கத்தின் வழிகாட்டு உரையில் குறிப்பிட்டதை விட அதிக பணம் அளிக்கவேண்டும்.
- எங்களுக்கு புதிய நிலத்தை கொடுக்கும் பொழுது அங்கு வேலைவாய்ப்பும் இணைத்து கொடுக்க வேண்டும்.
- விமான நிலையத்தின் ரன்வே-வை வேறு திசை நோக்கி அமைக்கவேண்டும். இதனால், 500 வீடுகள் சேதாரம் ஆகாமல் பாதுகாக்கலாம்.
இவ்வாறு அக்குடியிருப்பில் இருக்கும் மக்களின் வேண்டுகோளை ஏற்று, தனிப்பட்ட அதிகாரிகளிடம் கலந்துரையாடி, DPR முறையாக அமைந்தால் அதற்கேற்ப ஏற்பாடுகளை செய்கிறோம்", என்று அமைச்சர் எ.வ வேலு கூறுகிறார்.
மேலும், "சென்னையில் இரண்டாவது விமான நிலையத்தை உருவாக்குவதனால், அந்நிய செலாவனியை ஈட்ட வும் பொருளாதாரத்தில் வளரவும் முடியும்.
இப்போது மீனம்பாக்கத்தில் இருக்கின்ற விமான நிலையம் 2029இல் முழு கட்டுப்பாடும் இழந்துவிடும். பக்கத்துக்கு மாநிலங்களில் இருக்கும் நகரங்களான பெங்களூரு மற்றும் ஹைதராபாதின் வளர்ச்சி அதிகரித்து கொண்டே போகிறது.
பெங்களூருவின் மைய பகுதியில் விமான நிலையம் இருந்தது, ஆனால் இப்போது 75 கி.மி. தொலைவில் அமைந்திருக்கிறது. மும்பையில் இரண்டாவது விமான நிலையம் உருவாகி கொண்டிருக்கிறது.
ஆகவே, அந்த நகரங்களுடன் ஒப்பிட்டு பார்க்கின்ற பொழுது நமக்கும் இரண்டாவது விமான நிலையம் அவசியம் என்று தோன்றுகிறது. அப்படி, அரசின் சார்பாக, சம்மந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து நேரடியாக நாங்கள் 11 இடங்களை பார்வையிட்டோம். அதில் 4 இடங்களை தேர்வு செய்து கலந்தாலோசித்தோம்.
அந்த நான்கு இடங்கள்: படாளம், திருப்போரூர், பன்னூர் மற்றும் பரந்தூர் ஆகும். இதில் திருப்போரூரும் படாளமும் கல்பாக்கத்திற்கு அருகில் இருப்பதால், அணுமின் நிலையத்தின் காரணமாக அங்கு அனுமதி மறுக்கப்பட்டது. பரந்தூரை ஒப்பிடுகையில் பன்னுரில் அதிகமான குடியிருப்புகள் தெரியவந்துள்ளது. அதனால், பரிந்துரை அரசாங்கம் சார்பாக தேர்ந்தெடுத்தோம்", என்றார்.
இதைத்தொடர்ந்து, பரந்தூரில் மக்களிடம் கையகப்படுத்தும் இடங்களுக்கு மூன்று மடங்கு விலை வைத்து பணம் வழங்கப்படும் என்றும், அவர்களுக்காக புதிய நிலமும், வீடு கட்டுவதற்கு பணமும் அரசாங்கம் வழங்கவிருக்கிறது என்று கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil