Chennai Tamil News: சென்னை மெட்ரோ பேஸ்-2வின் கட்டுமான நீட்டிப்பிற்கு சாத்தியக் கூறு அறிக்கை தயார் செய்ய சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் டெண்டர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
விம்கோ நகரிலிருந்து சென்னை விமான நிலையம் வரை சுமார் 54.1 கிலோமீட்டர் தொலைவிற்கும் சென்ட்ரலில் இருந்து பரங்கிமலை வரை இரண்டு வழித்தடங்களை கொண்டது சென்னை மெட்ரோவின் முதல் கட்டுமானத் திட்டம். தற்போது அந்த திட்டம் முழுமையாக செயல்பாட்டில் உள்ளது.

மேலும், தற்போது சென்னை மெட்ரோ பேஸ்-2வின் கட்டுமானம் நடந்து வருகிறது.
இந்த கட்டுமானப் பணி 69,180 கோடி ரூபாய் செலவில், 118.9 கிலோ மீட்டர் நீளத்திற்கு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தப் பணிகள் அனைத்தும் 2026ஆம் ஆண்டிற்குள் முடிக்கவேண்டும் என்று இலக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டுமானப் பணி மூன்று வழித்தடங்களில் நடைபெற்று வருகிறது. இதன்படி மூன்றாவது வழித்தடம் மாதவரம் முதல் சிறுசேரி வரையில் 45.8 கிலோமீட்டர் நீளத்திற்கு அடையாறு, மயிலாப்பூர், புரசைவாக்கம் வழியாகவும் கட்டப்படுகிறது.
மேலும், நான்காவது வழித்தடம் கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை 26.1 கிலோமீட்டர் நீளத்திற்கு தி.நகர், வடபழனி, போரூர் வழியாகவும் கட்டப்படுகிறது.
ஐந்தாவது வழித்தடம் சுமார் 47.0 கிலோமீட்டர் நீளத்திற்கு, மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை கட்டப்படுகிறது. வில்லிவாக்கம், ராமாபுரம், மேடவாக்கம் வழியாகவும் இந்த வழித்தடம் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தற்போது, சென்னை மெட்ரோவின் இரண்டாம் கட்டுமானப் பணி நீட்டிப்பிற்கு சாத்தியக் கூறு அறிக்கை தயார் செய்ய சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் டெண்டர் எடுத்துள்ளது.
இதன்படி சென்னை மெட்ரோவின் பேஸ்-3 வழித்தடத்தில் கேளம்பாக்கத்தில் இருந்து மாம்பாக்கம், வண்டலூர் வழியாக, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரையிலும், சிறுசேரியில் இருந்து கிளாம்பாக்கம் வரையிலும், 4-வது வழித்தடத்தில் பூந்தமல்லி முதல் திருப்பெரும்புதூர் வரையிலும், 5-வது வழித்தடத்தில் திருமங்கலம் முதல் ஆவடி வரையிலும் நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்வதற்கு சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் டெண்டர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil