Advertisment

நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும்

மருத்துவக் கல்விக்கான நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய அரசுக்கு அழுத்தம் தரவேண்டும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
neet excam - usa

மருத்துவக் கல்விக்கான நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிப்பதற்கான தமிழ்நாட்டு அரசின் சட்டமுன்வரைவுக்கு குடியரசுத் தலைவர் ஏற்பு அளிப்பதை உறுதிப்படுத்த மத்திய அரசுக்கு அழுத்தம் தரவேண்டும் என்று அமெரிக்காவிலுள்ள உலகத் தமிழ் அமைப்பு வலியுறுத்துகிறது.

Advertisment

சென்னையில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் உலகத் தமிழர் அமைப்பின் கோரிக்கையை கொழந்தவேல் இராமசாமி (உலகத் தமிழ் அமைப்பு, அமெரிக்கா), அரி பரந்தாமன் (முன்னாள் நீதியரசர்), பெ. மணியரசன் (தமிழ்த்தேசியப் பேரியக்கம்), தோழர் தியாகு (தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம்), வழக்கறிஞர் பாலு (பாட்டாளி மக்கள் கட்சி), தி. வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமைக் கட்சி), செந்தமிழன் சீமான் (நாம் தமிழர் கட்சி), பேராசிரியர் ஜவாஹருல்லா (மனித நேய மக்கள் கட்சி), ஆழி செந்தில்நாதன் (தன்னாட்சித் தமிழகம்), யா. அருள்தாஸ் (பச்சைத் தமிழகம்), செல்வி (மனிதி), வ. கவுதமன் (இயக்குநர்), பிரின்ஸ் என்னாரெஸ் (திராவிடர் கழக மாணவர் அணி) வினோத் களிகை (இளந்தமிழகம்), மூர்த்தி (கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு, திருப்பூர்), இளையராஜா (தமிழ்நாடு மாணவர் முன்னணி) உள்ளிட்டோர் வெளியிட்டனர்.

நீட் தேர்வின் காரணமாக தன்னுயிரை ஈந்த அனிதாவின் மறைவுக்குப் பிறகு, அமெரிக்காவில் பல்வேறு நகரங்களில் நீட்தேர்வுக்கு எதிராக அமெரிக்கத் தமிழர்கள்தன்னெழுச்சியாகப் போராட்டங்களை நடத்தினார்கள்.

இது குறித்து உலகத் தமிழ் அமைப்பு கூறுவதாவது: “அமெரிக்காவிலுள்ள தமிழர்களாகிய நாங்கள் தமிழ்நாட்டின் கல்விச்சூழலால் உருவாக்கப்பட்டு மருத்துவர்களாகவும்,பொறியாளர்களாகவும், பேராசிரியர்களாகவும் மற்ற பிற துறைகளின் வல்லுநர்களாகவும் இங்கே பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். தமிழ்நாட்டின் உயர்கல்வி, தொழிற்கல்வி உள்பட கல்வித்துறைமேலும் மேம்படவேண்டும் என்பதில் எங்களுக்கும் உடன்பாடே. ஆனால் பல ஆண்டுகாலமாக தமிழ்நாட்டு அரசும் கல்வியாளர்களும் தமிழ்நாட்டின் சமூகப் பொருளாதாரச் சூழல்களினூடாக வளர்த்தெடுத்த மருத்துவக்கல்வி உள்பட கல்விமுறையை ஒன்றிய அரசு துச்சமென மதிப்பதையும் அழிப்பதையும் நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். நமது மருத்துவக் கல்வியானது தமிழ்நாட்டிலும் உலகெங்கிலும் மிகச்சிறந்த மருத்துவர்களை பல்லாயிரக்கணக்கில் உருவாக்கியிருக்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்.

நீட் தமிழ்நாட்டின் நலன்களுக்கு, குறிப்பாக ஏழைகளுக்கும் ஊர்புற மாணவர்களுக்கும் எதிரானது. அது இந்தியக் கூட்டாட்சித் தன்மைக்கும் எதிரானது. மருத்துவக் கல்லூரிகளை அமைத்தல், அவற்றை ஒழுங்குபடுத்துவதற்காக டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகச் சட்டம் இயற்றுதல், நுழைவுத்தேர்வு முறையை சீராய்வுகளுக்குப்பின் நீக்குதல், மருத்துவ உயர்கல்விக்கும் ஊர்புற மருத்துவச்சேவைக்கும் தொடர்பு உருவாக்குதல் என தமிழ்நாடு தனது பட்டறிவின் அடிப்படையில் முடிவெடுத்து இந்தியாவிலேயே மிகச்சிறந்த மருத்துவக் கல்வி முறையை உருவாக்கியிருக்கிறது. அது மிகச்சிறந்த சுதாதார உள்கட்டமைப்பையும் தமிழ்நாட்டில் உருவாக்கியிருக்கிறது. எனவே நீட் தேர்வு முறை நமது தனித்துவமான மருத்துவக் கல்வியையும் சுகாதார முறையையும்அழிக்கக்கூடிய ஒன்றாக இருப்பதாகவே அமெரிக்கத் தமிழர்களாகிய நாங்கள் கருதுகிறோம்.

இந்நிலையில் நீட் விவகாரம் தொடர்பாக தமிழ்நாட்டு அரசு இந்த ஆண்டு ஜனவரியில் சட்டப்பேரவையில் நிறையவேற்றிய சட்டமுன்வரைவு மீது ஒன்றிய அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்காமலிருக்கிறது. தமிழ்நாடு-புதுச்சேரி அரசுகளும், இம்மாநிலங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதுகுறித்து வலியுறுத்தாமல் அமைதிகாப்பது விளங்கிக்கொள்ளமுடியாத புதிராக இருக்கிறது. எனவே, எந்த காலதாமதமும் இன்றி, தமிழ்நாடு அரசும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் விரைந்து செயலாற்றி, தமிழ்நாட்டு அரசின் சட்டமுன்வரைவு குடியரசுத்தலைவருக்கு அனுப்பப்படவும், அவரால் ஏற்கப்படவும் ஆவன செய்யவேண்டும் என்று அமெரிக்கத் தமிழர்கள் உள்ளிட்ட உலகத் தமிழர்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.” என்றனர்.

Neet Anitha
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment