பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 26 தூத்துக்குடியில் நடைபெறும் ஒரு விழாவில், தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களுக்கான மூன்று முக்கிய ரயில் திட்டங்களை தொடங்கி வைக்கிறார். இந்தத் திட்டங்களின் மொத்த மதிப்பு ரூ. 1,030 கோடி ஆகும். இந்தத் திட்டங்கள், தென் மாவட்டங்களில் உறுதியான ரயில் இணைப்பை வலுப்படுத்தும் என்று அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த திட்டங்கள் என்னென்ன என்று விரிவாக பார்க்கலாம்.
மதுரை–போடிநாயக்கனூர் மின்மயமாக்கல் திட்டம்: ரூ.99 கோடி செலவில் 90 கி.மீ நீளமுள்ள மதுரை–போடிநாயக்கனூர் வழித்தட மின்மயமாக்கல் திட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது. இது சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்தை ஊக்குவிப்பதுடன், சுற்றுலாவுக்கும் உதவும். மேலும், மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் உள்ள தினசரி பயணிகள், விவசாயிகள், மாணவர்கள் மற்றும் சிறு வியாபாரிகளுக்கு இத்திட்டம் பெரிதும் பயனளிக்கும். இந்த வழித்தடத்தில் கூடுதல் விரைவு ரயில் சேவைகளை அறிமுகப்படுத்தவும், பயணிகளின் பயண நேரத்தைக் குறைக்கவும் இது வழிவகுக்கும்.
நாகர்கோவில் டவுன்–கன்னியாகுமரி இரட்டை ரயில் பாதை: திருவனந்தபுரம்–கன்னியாகுமரி இரட்டை ரயில் பாதை திட்டத்தின் ஒரு பகுதியாக, 21 கி.மீ நீளமுள்ள நாகர்கோவில் டவுன்–கன்னியாகுமரி பிரிவின் ரூ. 650 கோடி மதிப்பிலான இரட்டை ரயில் பாதை திட்டத்தையும் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இது தெற்குப் பகுதியில் இணைப்பை வலுப்படுத்தும். இந்தப் புதிய இரட்டைப் பாதை, கூடுதல் பயணிகள் மற்றும் சரக்கு ரயில் சேவைகளை இயக்க வழிவகுப்பதுடன், செயல்பாட்டுத் திறனையும் மேம்படுத்தியுள்ளது.
அரல்வாய்மொழி–நாகர்கோவில் சந்திப்பு மற்றும் திருநெல்வேலி–மேலப்பாளையம் இரட்டை ரயில் பாதைகள்: ரூ. 283 கோடி செலவில் அரல்வாய்மொழி–நாகர்கோவில் சந்திப்பு (12.87 கி.மீ) மற்றும் திருநெல்வேலி–மேலப்பாளையம் (3.6 கி.மீ) பிரிவுகளில் மேற்கொள்ளப்பட்ட இரட்டை ரயில் பாதை பணிகளும் தொடங்கி வைக்கப்பட உள்ளன. இது சென்னை–கன்னியாகுமரி போன்ற முக்கிய தென் வழித்தடங்களில் பயண நேரத்தைக் குறைப்பதுடன், பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்துத் திறனை மேம்படுத்துவதன் மூலம் பிராந்திய பொருளாதார வளர்ச்சிக்கும் பங்களிக்கும்.
இந்த ரயில் திட்டங்கள் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களின் உட்கட்டமைப்பு மேம்பாட்டில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.