பிரதமர் நரேந்திர மோடி சேலத்தில் பாரதிய ஜனதா கட்சி மாநாட்டில் கலந்துகொண்டார். இந்த மாநாட்டில் ஆடிட்டர் ரமேஷ் படுகொலை குறித்து பேசுகையில் நா தழுதழுத்து காணப்பட்டார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், “நண்பர்களே. நான் சேலத்துக்கு பலமுறை வந்துள்ளேன். இந்த முறை சேலம் வந்தபோது எனக்கு பழைய சில நினைவுகள் எல்லாம் ஞாபகம் வருகின்றன.
40 ஆண்டுகளுக்கு முன்பு நான் கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்ற போது, அங்கு ஒரு குழுவில் இந்த ஊரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இருந்தார்.
அவர் பெயர் ரத்னவேல். எனக்கு அவரின் நியாபகம் வருகிறது. அவர் என்னுடன் பயணிக்கும்போது, சேலம் குறித்து பல்வேறு செய்திகளை அவர் கூறினார்.
அவர் அங்கிருந்து திரும்பிவந்து ஒரு உணவகம் நடத்திவந்தார். அவர் தற்போது உயிருடன் இல்லை. ஒரு விபத்தில் உயிரிழந்து விட்டார். அவரின் நினைவு எனக்கு இப்போது வருகிறது.
அதேபோல் கே.என். லட்சுமணனை நினைவுக் கூர்கிறேன். பாரதிய ஜனதா கட்சி காலூன்றுவதற்காக பல அரும்பாடுகள் பட்டார். அவர் பல பள்ளிகளை நடத்தினார்.
எனினும் என் நினைவை உலுக்கியது ஆடிட்டர் ரமேஷ் படுகொலை. சமூக விரோதிகளால் அந்த நேர்மையாளர் ஆடிட்டர் ரமேஷ் படுகொலை செய்யப்பட்டார்” என்றார்.
அப்போது பிரதமர் மோடி சிறிது நேரம் கண்கலங்கினார். அவரது நா தழுதழுத்தது. சிறிது நேரம் மௌமாக நின்று அங்கிருந்த கண்ணாடி கிளாஸில் இருந்த தண்ணீரை அருந்தினார்.
தொடர்ந்து, அனைவரும் எழுந்து நின்று ஆடிட்டர் ரமேஷ் புகழ் வாழ்க எனவும் அவருக்காக சிறிது நேரம் அஞ்சலியும் செலுத்தினர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“