திருப்பூரில் நாளை நடைபெற இருக்கும் பொதுக்கூட்டம் மற்றும் பல்வேறு திட்டங்களின் தொடக்க விழாவை சிறப்பிக்க பிரதமர் மோடி தமிழகம் வருகை.
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் பகுதியில் வரும் 10ஆம் தேதி பிரதமர் மோடி கலந்துகொள்ளும் பொதுக்கூட்டம் மற்றும் பல்வேறு திட்டங்களின் தொடக்க விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
பிரதமர் மோடி திருப்பூர் வருகை சிறப்பு ஏற்பாடு
அப்பகுதியில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் மைதானம் தேர்வு செய்யப்பட்டு பொதுக்கூட்டத்துக்காக ஒரு மேடையும் பல்வேறு நலத்திட்டப் பணிகளை தொடங்கிவைப்பதற்காக மற்றொரு மேடையும் அமைக்கப்பட்டு வருகின்றது.
நாளை வரும் பிரதமர், சென்னை வண்ணாரப்பேட்டை - டி.எம்.எஸ் இடையிலான மெட்ரோ சேவையை காணொலி காட்சி மூலம் பிரதமர் தொடங்கிவைக்கிறார். நலத்திட்ட பணிகள் துவக்கி வைக்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், கவர்னர் பன்வாரிலால் புரோகித் மற்றும் பிற அமைச்சர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொள்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு பிரதமர் பொதுக்கூட்டம் மேடைக்குச் செல்கிறார். பிரதமர் வந்து இறங்குவதற்காக மைதானம் அருகே ஹெலிபேடு அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படலாம் என்ற நிலையில், இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே தமிழகத்திற்கு இவர் இரண்டாவது முறையாக வருகை தருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.