2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி அனைத்து கட்சிகளும் களப்பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர். இதனை முன்னிட்டு தமிழகத்தில் காணொலி மூலம் பிரதமர் மோடி உரை ஆற்றினார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி ‘என் வாக்குச் சாவடி வலுவான வாக்குச் சாவடி’ என்ற தலைப்பில் தொகுதிகள் வாரியாக பா.ஜ.க. நிர்வாகிகளுடன் காணொலி காட்சி மூலம் உரையாற்றி வருகிறார். கடந்த வாரம் தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் உரையாற்றிய அவர், நேற்று டெல்லியில் இருந்து காணொலி மூலம் மீண்டும் பாஜக தொண்டர்களுடன் பேசினார்.
தமிழகத்தின் தொகுதிகளில் பிரதமர் மோசி உரை
தமிழகத்தில் உள்ள மத்தியசென்னை, வடசென்னை, திருவள்ளூர், திருச்சி, மதுரை ஆகிய 5 நாடாளுமன்ற தொகுதிகளை சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகிகளுடன் பேசினார். இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க. மாநில செயலாளர் கரு.நாகராஜ், எஸ்.சி. கமிஷன் தேசிய துணைத்தலைவர் முருகன், திருவள்ளூர் மாவட்ட பா.ஜ.க. பொதுச்செயலாளர் ராஜ்குமார், மாவட்ட இளைஞரணி தலைவர் ஆர்யா சீனிவாசன், மாவட்ட செயலாளர் பாலாஜி உள்பட பலரும் கலந்து கொண்டனர்.
“நல்ல தலைமை என்பது கூட்டணிக்கு மிகவும் அவசியம். ஆனால் இப்போது அமைந்திருக்கும் கூட்டணி குறுகிய வட்டத்தையே கொண்டிருக்கிறது. இதனால் மக்களுடைய நலனில் எந்த முன்னேற்றமும் ஏற்படாது. எனவே மக்கள் அதனை ஏற்கவும் மாட்டார்கள்.
தமிழகத்தில் ஏழை மக்களுக்காகவே வாழ்ந்து மறைந்தவர் எம்.ஜி.ஆர். அத்தகைய ஒப்பற்ற தலைவரையே காங்கிரஸ் பழி தீர்க்க நினைத்தது. ஜெயின் கமிஷன் விவகாரத்தை சுட்டிக்காட்டி பா.ஜ.க - தி.மு.க. கூட்டணியை காங்கிரஸ் ஏளனம் செய்தது. ஆனால் தற்போது காங்கிரஸ் கட்சியுடன் தி.மு.க. கைக்கோர்த்துள்ளது.
ஆந்திர மாநிலத்தை சேர்ந்த என்.டி.ராமாராவ். புகழ் பெற்ற நடிகராக இருந்த அவர் தெலுங்கு தேசம் என்ற கட்சியை தொடங்கி, காங்கிரசின் கோட்டையான ஆந்திராவிலேயே துணிந்து தேர்தலில் நின்றார். இனி காங்கிரசுக்கு ஆந்திராவில் செல்வாக்கு இருக்குமா? என்ற அளவுக்கு மக்களின் ஓட்டுகளை அவர் பெற்றார். பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைத்தார். ஆனால் இன்று அதே கட்சியை சேர்ந்த தலைவர்கள் காங்கிரசுடன் ஒரே வரிசையில் நின்று கூட்டணிக்காக கைக்கோர்த்து இருக்கிறார்கள். இதை ஆந்திர மக்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்?.
நாடு மக்களாட்சியை விரும்புகிறது. தவறான கூட்டணியை அல்ல. நாடு வளர்ச்சியை விரும்புகிறது. வளத்தை மட்டுமே விரும்பும் கூட்டணியை அல்ல.” என்று பேசினார்.