நரேந்திர மோடி தமிழகம் வருகை : இந்த வருடம் பொதுத்தேர்தல் நடைபெற இருப்பதை ஒட்டி, தேசிய கட்சிகள் தங்களை பலப்படுத்தி வருகின்றன. நேற்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தமிழகம் வந்துள்ளார். அவருடன் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் சேர்ந்து திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை மாவட்ட பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
மாண்புமிகு வெளியுறவுத்துறை அமைச்சர் திருமதி.சுஷ்மா சுவராஜ் அவர்கள் கமலாலயத்திற்கு வருகைதந்து தமிழக பாஜக தலைவர்கள் , பிரதிநிதிகளிடம் நம்பாரதப்பிரதமரின் நலத்திட்டங்கள் ஒவ்வொன்றாக மக்களிடம் எடுத்துச்சென்று வாக்குச்சேகரிக்குமாறு உரையாற்றினார்கள்.(1/2) pic.twitter.com/2B2VD6rhNX
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiBJP) 5 January 2019
நரேந்திர மோடி தமிழகம் வருகை : பொதுத் தேர்தல் பிரச்சாரம்
சென்னை தியாகராய நகரில் அமைந்திருக்கும் கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சவுந்தரராஜன், நரேந்திர மோடி, ஜனவரி 27ம் தேதி தமிழகம் வருக்கின்றார் என்று அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளார். மேலும் அவருடைய வருகையை ஒட்டி மதுரையில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருக்கின்றார்கள் பாஜகவினர்.
மோடியின் வருகை, மிகப் பெரிய மாநாடாகவும், கட்சியின் 2019 பொதுத் தேர்தல் பிரச்சாரமாகவும் இருக்கும் என தமிழிசை சவுந்தரராஜன் கூறியிருக்கிறார். மக்களவைத் தேர்தல் குறித்து கேட்ட போது, கூட்டணியுடன் தான் தேர்தலை சந்திப்போம் என்று கூறினார். திருவாரூர் தேர்தலில் கூட்டணிப் பற்றியும், மக்களவைத் தேர்தல் குறித்து கேட்ட போதும், பின்னர் அறிவிக்கின்றேன் என்று கூறினார் தமிழிசை.
மதுரையில் அமைய இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையின் அடிக்கல் நாட்டு விழா மற்றும் சென்னை – மதுரை ரயில் சேவையான தேஜஸ் ரயில் சேவையினையும் துவக்கி வைக்க உள்ளார் நரேந்திர மோடி.தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, க்ரீன்வேஸ் சாலையில் அமைந்திருக்கும் அவருடைய இல்லத்தில் சந்தித்து பேசினார் தமிழிசை சவுந்தராஜன்.