தமிழக மழை வெள்ள பாதிப்பு, மீட்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து பிரதமர் அலுவலகம் ஆலோசனை நடத்தியுள்ளது.
தமிழகத்தில் டிசம்பர் முதல் வாரத்தில் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் இந்த 4 நான்கு மாவட்டங்களும் நீரில் மூழ்கின. இதனைத்தொடர்ந்து 3 ஆவது வாரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்மாவட்டங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்கள் மழை வெள்ளத்தில் மூழ்கின.
இந்தநிலையில், தமிழகத்தில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பு, மீட்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து பிரதமர் அலுவலகத்தில் ஆலோசனை நடந்தது.
தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு குறித்த உயர்மட்டக் கூட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடத்தினார். பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தமிழகத்தில் நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகளின் முன்னேற்றம் குறித்து பிரதமர் மோடி அறிந்து கொண்டார். மாநில அரசு செய்து வரும் மறுவாழ்வு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு முழு ஒத்துழைப்பை வழங்குமாறு மத்திய அதிகாரிகளுக்கு பிரதமர் உத்தரவிட்டார்.
கூட்டத்தில் மீட்பு பணிக்கு கூடுதல் ஹெலிகாப்டர்கள், தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் தேவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. தமிழகத்தில் வெள்ள பாதிப்பு குறித்து மத்திய குழு வந்து ஆய்வு செய்தது குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, வெள்ளத்திற்குப் பிறகு மாநில நிவாரணம் மற்றும் மறுவாழ்வு குறித்து பிரதமர் அலுவலக அதிகாரிகள் தமிழகத்தில் உள்ள அதிகாரிகளுடன் கலந்துரையாடினர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“