மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். 100 ஆண்டு விழாவை முன்னிட்டு 10 ஆண்டுகளாகச் சிறையில் உள்ள கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
கொடைக்கானலில் கோடை விழா மற்றும் 57-ஆவது மலர்க் கண்காட்சியை நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். மலர்க் கண்காட்சியின் தொடக்க விழாவில் பேசிய அவர், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்துச் செயல்படுத்தி வருவதாகக் கூறினார்.
எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 10 ஆண்டுகளாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று முதல்வர் அறிவித்தார். மேலும் தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது எனக் கூறும் எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டு தவறு; பல மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்றும் அவர் கூறினார். இந்தச் சட்ட ஒழுங்கிற்குச் சான்றாக நாட்டிலேயே கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையம் முதலிடத்தையும், அண்ணாநகர் காவல் நிலையம் 5-ஆவது இடத்தையும் பிடித்து சிறந்த காவல் நிலையங்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசைப்பெற்றுள்ளன என்றும் சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக தற்போதைய ஆட்சியிலேயே சட்டம் ஒழுங்கு முறையாகக் காப்பாற்றப்பட்டு வருகிறது என்றும் முதல்வர் பழனிசாமி கூறினார்.