கொரோனா தொற்று இல்லாமல் பாதுகாப்பாக உள்ள கைதிகள்; சிறைத்துறைக்கு நீதிமன்றம் பாராட்டு

தமிழக சிறைகளில் கைதிகள் கொரோனா தொற்றுக்கு ஆளாகாமல் பாதுகாப்பாக உள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கைதிகள் தொடர்பாக, சிறைத்துறையின் நடவடிக்கையை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

By: Updated: April 9, 2020, 07:30:17 PM

தமிழக சிறைகளில் கைதிகள் கொரோனா தொற்றுக்கு ஆளாகாமல் பாதுகாப்பாக உள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கைதிகள் தொடர்பாக, சிறைத்துறையின் நடவடிக்கையை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, சிறைகளில் நெருக்கடியை குறைக்க வேண்டும் என்றும், 7 ஆண்டுகள் மற்றும் அதற்கு கீழ் தண்டனை விதிக்கக்கூடிய வழக்குகளில் கைதாகி சிறைகளில் உள்ளவர்களுக்கு ஜாமீன் மற்றும் பரோல் வழங்க உயர்மட்டக்குழுவை அமைத்து முடிவு செய்யலாம் எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி தமிழக சிறைகளில் இருந்த ஆயிரக்கணக்கான விசாரணை கைதிகள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கைதிகளை அவர்களின் குடும்பத்தினர் சந்தித்து பேச தடை விதிக்கப்பட்டுள்ளதால், தங்களுக்கு பரோல் வேண்டி பல கைதிகள், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்குகள் நீதிபதிகள் சிவஞானம் மற்றும் கல்யாணசுந்தரம் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக சிறைகளில் கைதிகள் கொரோனா தொற்றுக்கு ஆளாகாமல் பாதுகாப்பாக உள்ளதாகவும், புதிய கைதிகளை அடைக்க 37 மாவட்ட மற்றும் கிளை சிறைகள் தனி சிறைகளாக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சென்னையைப் பொறுத்தவரை, புதிய கைதிகள் யாரும் புழல் சிறையில் அடைக்கப்படுவதில்லை எனவும், சைதாப்பேட்டை கிளைச் சிறையில் அடைக்கப்படுவதாகவும் அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.

கொரோனா பரவும் அபாயம் உள்ள அசாதாரண சூழலில் தமிழக சிறைகளில் புதிதாக 58 செல்போன்கள் வாங்கப்பட்டு, வீடியோகால் மூலமாக 15 ஆயிரம் கைதிகள், தங்கள் குடும்பத்தினருடன் பேசியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழக சிறைத்துறையின் இந்த நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்த நீதிபதிகள், விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Prisoners safe in jail away to corona virus affecting chennai high court praise prison department

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X