தஞ்சாவூரை சேர்ந்த இளைஞர் ஒருவருடைய வங்கி கணக்கில் இருப்பு தொகையாக 756 கோடி ரூபாய் இருப்பதாக வங்கியிலிருந்து மெசேஜ் வந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த விபரம் வருமாறு;
தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அருகே உள்ள வீரப்புடையான் பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இளைஞரான இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இந்தநிலையில் நேற்று இரவு தனியார் வங்கி ஒன்றில் அவர் வைத்துள்ள அக்கவுண்டிலிருந்து அவருடைய நண்பர் ஒருவருக்கு ரூ.1,000 அனுப்பியுள்ளார்.
இதனை தொடர்ந்து வங்கியிலிருந்து வந்த மெசேஜில் கணேசனில் வங்கி கணக்கில் இருப்பு தொகையாக 756 கோடி ரூபாய் இருப்பதாக மெசேஜ் வந்துள்ளது.
இதை பார்த்த அந்த இளைஞர் அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்த சம்பவம் தஞ்சாவூர் பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இது குறித்து கணேசனிடம் பேசினோம், நான், தஞ்சாவூர் புதிய பேருந்துநிலையம் அருகே உள்ள கோட்டக் மஹேந்திரா தனியார் வங்கியில் அக்கவுண்ட் வைத்துள்ளேன். என்னுடைய கணக்கில் சுமார் 15,000 ரூபாய் வைத்திருந்தேன். இந்தநிலையில் நேற்று இரவு ஒரு மணியளவில் என் நண்பர் ஒருவருக்கு 1,000 ரூபாய் அனுப்பினேன். அடுத்த சில நிமிடங்களில் பணம் அனுப்பியது பெயில்டு என மெசேஜ் வந்தது.
பின்னர், எனது அக்கவுண்டிற்கு மீண்டும் ரூ.1,000 கிரெடிட் ஆகிவிட்டது. இதை தொடர்ந்து சில நிமிடங்களில் மற்றொரு மெசேஜ் வந்தது. அதில் என்னுடைய வங்கி கணக்கின் லெட்ஜரர் பேலன்ஸின் இருப்பு தொகையாக 756 கோடி ரூபாய் இருப்பதாக மெசேஜ் வந்தது. இதை பார்த்த எனக்கு அதிர்ச்சியாகி விட்டது.
விடிந்ததும் மற்றொரு வங்கியில் வேலை செய்யும் எனது நண்பர் ஒருவரிடம் மெசேஜை காட்டினேன். அதனை செக் செய்த அவர் உனது அக்கவுண்டில் பணம் இருப்பதாகத்தான் மெசேஜ் வந்துள்ளது. உடனே சம்மந்தப்பட்ட வங்கி நிர்வாகத்திடம் சென்று தகவல் தெரிவித்து விடு என்றார். காலை பத்து மணி ஆனதும் கோட்டக் மஹேந்திரா வங்கிக்கு சென்று மெசேஜை காண்பித்து விபரம் கேட்டேன். அதை பார்த்த ஊழியர்கள் நீங்கள் போங்கள் என்னவென்று விசாரித்து விட்டு உங்களுக்கு போன் செய்கிறோம் என என்னை திருப்பி அனுப்பி விட்டனர் என்றார்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு சென்னையை சேர்ந்த டிரைவர் ஒருவரின் வங்கி கணக்கில் 9,000 கோடி ரூபாய் வந்ததாகவும், அதனை அந்த வங்கி தரப்பு திருப்பி டிரான்ச்பர் செய்து கொண்டதாகவும் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
மொத்தத்தில் தனியார் வங்கியால் சிலர் தனியார் ஊழியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாவது வாடிக்கையாகி விட்டது.
செய்தி: க. சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“