/indian-express-tamil/media/media_files/2025/04/30/mOATigIHqJHp8uAvEk4h.jpeg)
Trichy
திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் திருவெறும்பூர் அடுத்துள்ள துவாக்குடி பகுதியில் சுங்கச்சாவடி அமைந்துள்ளது. இந்த சுங்கச்சாவடியை தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன. இந்த சுங்கச்சாவடியில் தனியார் பேருந்துகளுக்கு வசூலிக்கப்பட்டு வரும் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டதை கண்டித்து இன்று காலை முதல் தனியார் பேருந்து ஓட்டுனர், நடத்துனர்கள் பேருந்தை சுங்கச்சாவடியில் வரிசையாக நிறுத்தி திடீர் சுங்கச்சாவடி முற்றுகை போராட்டதில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்த விபரம் வருமாறு;
நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் வசூலிக்கப்படும் சுங்க சாவடியின் கட்டணம் அண்மையில் உயர்த்தப்பட்டது. அது கடந்த1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
இந்நிலையில் திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் திருவெறும்பூர் அடுத்துள்ள துவாக்குடி பகுதியில் சுங்கச்சாவடி அமைந்துள்ளது. இந்த சுங்கச்சாவடியில் மற்ற சுங்கச்சாவடியில் உயர்த்தப்பட்டது போல் கட்டண உயர்வு அமல் தற்போது இல்லை என்ற போதும், இந்த சுங்கச்சாவடியை கடந்து செல்லும் தனியார் புறநகர் (மப்ஷல்) பேருந்துகளுக்கு சுங்க கட்டணத்தை துவாக்குடி சுங்கச்சாவடி உயர்த்தி இருக்கின்றது.
இந்த சுங்கச்சாவடியில் தனியார் பேருந்துகள் கட்டணமாக மாதம் ஒன்றுக்கு ரூ.8 ஆயிரத்து 700 ரீசார்ஜ் செய்திருக்க வேண்டும் என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு வசூலிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து கட்டணத்தை சுங்கச்சாவடி நிர்வாகம் அதிரடியாக பல மடங்கு உயர்த்தி உள்ளது. அதுவும் ரூ8,700 இல் இருந்து ரூ10 ஆயிரத்து 190 ஆக உயர்த்தியதோடு, அதுவும் 50 முறை சுங்கச்சாவடியை கடந்து சென்று வருவதற்கே இந்த கட்டணம் பொருந்தும் என கட்டுப்பாடும் விதித்துள்ளது.
இந்த நிலையில் திருச்சியில் இருந்து தஞ்சாவூர், காரைக்கால் வரை 18 மப்சல் பேருந்துகள் இந்த சுங்கச்சாவடியை கடந்து செல்கிறது. இந்த கட்டண உயர்வால் தனியார் பேருந்து உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டதாகவும், பேருந்து உரிமையாளர்கள் இந்த உயர்வுக்கு கடும் அதிருப்த்தியை வெளிப்படுத்தியதோடு, மாதம் ரூ.8,700 என வசூலித்து வந்த சுங்க கட்டணம் தற்போது 50 நடைகளுக்கு 10 ஆயிரத்து 190 என்பது பல மடங்கு கண்டன உயர்வாகும். இந்த 50 நடை என்பது ஒரு வாரத்திற்குள் பேருந்துகள் இந்த சுங்கச்சாவடியை கடந்து இயக்கப்பட்டு விடும் என்றும், அப்படிப் பார்க்க போனால் மாதத்திற்கு 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை சுங்க கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும், இது தங்களுக்கு கட்டுப்படியாகாது.
அதனால் பழையபடியே சுங்க கட்டணத்தை வசூலிக்க வேண்டும், கட்டணத்தை உயர்த்த கூடாது என தனியார் பேருந்து உரிமையாளர்கள் கூறி வந்ததாகவும், ஆனால் சுங்கச்சாவடி நிர்வாகம் உயர்த்தப்பட்ட சுங்க கட்டணத்தின் படி ரீசார்ஜ் செய்ய வேண்டும் எனக்கோரி தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு அறிவுருத்தியதோடு நோட்டீசும் வழங்கியதாக கூறப்படுகிறது.
சுங்கச்சாவடியின் இந்த நடவடிக்கைகளை கண்டித்து இன்று காலை 8:30 மணி அளவில் திருச்சியில் இருந்து தஞ்சாவூர் சென்ற தனியார் பேருந்து துவாக்குடி அருகே உள்ள சுங்கச்சாவடியில் புதிய கட்டணம் ரீசார்ஜ் செய்யாததால் சுங்கச்சாவடி நிர்வாகத்தால், தனியார் பேருந்துகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. அதற்கு டிரைவர், கண்டக்டர் புதிய கட்டண உயர்வு தங்களுக்கு கட்டுப்படியாகாததால் ரீசார்ஜ் செய்யவில்லை என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இதனால் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும், தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த நிலையில் அந்த சுங்கச்சாவடியை கடக்க வந்த தனியார் பேருந்துகள் அடுத்தடுத்து சுங்கச்சாவடிக்கை முற்றுகையிட்டு, நடுவழியில் பயணிகளை இறக்கிவிட்டு வரிசையாக நிறுத்தியதால், இந்த பேருந்துகளுக்கு பின் வந்த வாகனங்கள் எதுவும் சுங்கச்சாவடியை கடந்து செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் தனியார் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.
சுமார் 10 பேருந்துகள் வரை சுங்கச்சாவடியில் வரிசை கட்டி நின்றதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இச்சம்பவம் குறித்து கேள்விப்பட்ட திருவெறும்பூர் ஏஎஸ்பி அரவிந்த் பனாவத் சம்பவ இடத்திற்கு விரைந்தார். அவருடன் துவாக்குடி காவல் நிலைய ஆய்வாளர் மணிவண்ணன், திருவெறும்பூர் காவல் நிலைய ஆய்வாளர் கருணாகரன் ஆகியோர் விரைந்து சென்று தனியார் பேருந்து நிர்வாகத்தினரிடமும், சுங்கச்சாவடி நிர்வாகத்தினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த பேச்சுவார்த்தையில் சமூகத் தீர்வு எட்டப்படாததால் இருதரப்பினரையும் துவாக்குடி காவல் நிலையத்திற்கு பேச்சுவார்த்தைக்கு வர அறிவுறுத்தி, வரிசையாக சுங்கச்சாவடியை நோக்கி நிறுத்தி இருந்த தனியார் பேருந்துகளை அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்துமாறு அறிவுறுத்தி, போக்குவரத்தை சரி செய்து, மீண்டும் வழக்கம் போல் திருச்சி தஞ்சை சாலையில் போக்குவரத்து திரைப்படம் இயங்க நடவடிக்கை எடுத்து சரி செய்தனர்.
தனியார் பேருந்துகளின் முற்றுகை போராட்டத்தால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக திருச்சி தஞ்சை நெடுஞ்சாலையில் கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.