தரமற்ற உணவு வழங்கியதாக தனியார் ஆலை பெண் பணியாளர்கள் சாலை மறியல்; விடுதி நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு

Private firm employees road blocking protest in Chennai Bengaluru highway: தரமற்ற உணவு சாப்பிட்ட 100க்கும் மேற்பட்ட பெண்களுக்கு வாந்தி, மயக்கம்; தனியார் ஆலை பெண் பணியாளர்கள் சாலை மறியல்; விடுதி நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு

சென்னை அருகே தனியார் விடுதியில் உணவு சாப்பிட்ட 100க்கும் மேற்பட்ட பெண்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால், அவர்கள் பணிபுரியும் தனியார் ஆலையைச் சேர்ந்த 5000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வந்த நிலையில், விடுதி நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காஞ்சிபுரம் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சுங்குவார்சத்திரத்தில் இயங்கி வரும் தனியார் செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் பூந்தமல்லி அருகே உள்ள விடுதியில் தங்கி பணியாற்றி வருகின்றனர்.

இந்தநிலையில், பெண் ஊழியர்கள் தங்கி இருந்த விடுதியில் கடந்த புதன்கிழமை வழங்கப்பட்ட உணவு தரமற்றதாக இருந்துள்ளது. அந்த உணவை சாப்பிட்ட 100-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட 100-க்கும் மேற்பட்ட பெண்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட பெண்களில் பெரும்பாலானோர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனால், சில பெண்கள் மருத்துவமனையில் இருந்து இன்னும் டிஸ்சார்ஜ் செய்யப்படவில்லை. அவர்களின் நிலை குறித்து தனியார் செல்போன் உதிரி பாகம் தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாகம் தரப்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த மற்ற ஊழியர்கள் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பிறகும் நிர்வாகம் முறையான தகவல் தெரிவிக்காததால், எட்டு நபர்கள் உயிரிழந்து இருப்பார்களா என்று சந்தேகம் எழுந்து போராட்டத்தில் இறங்கினர். நேற்று இரவு 12 மணிக்கு தொடங்கிய அப்போராட்டம் விடிய விடிய நடந்து, தற்போதுவரை பல மணி நேரங்களாக அது தொடர்கிறது.

ஊழியர்கள் தொடர்ந்து 8 மணி நேரத்திற்கு மேலாக சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், சென்னை-பெங்களூரு சாலையில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஊழியர்களை சமாதானப்படுத்தி போக்குவரத்தை சரிசெய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். 

இதைத்தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி போராட்டக்காரர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அவர்களிடம் ஆட்சியர் ஆர்த்தி, “2 பெண்கள் (கஸ்தூரி, ஐஷ்வர்யா) இறந்ததாக வெளியான தகவல் வதந்தி. 2 பெண் தொழிலாளர்களும் நலமுடன் இருப்பதாக தெரிவித்தார். உடல்நலம் பாதிக்கப்பட்டபோது மயங்கிய நிலையிலுள்ள வீடியோ தவறாக பரப்பப்படுகிறது. பிற ஊழியர்கள் அனைவரும்கூட நலமாக உள்ளனர். டீஹைட்ரேஷன் ஆகி அவர்களுக்கு உடல் உபாதை ஏற்பட்டிருந்திருக்கிறது. அனைவருக்கும் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு, தற்போது அவர்களும் நலமாகவே உள்ளனர். பாதிக்கப்பட்ட 115 பேரும் தற்போது நலமுடன் உள்ளனர். விடுதிகளில் இனி இப்படி நடக்காமல் இருக்க, தனியொரு கமிட்டி விரைவில் அமைக்கப்படும். தற்போது இவ்விவகாரத்தில் தரமற்ற உணவு வழங்கிய விடுதி வார்டன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார். மேலும், போராட்டாக்காரர்கள் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் 2 பெண்களிடமும் வீடியோ காலில் பேசி அதனை போராட்டத்திலுள்ள தொழிலாளர்களிடம் ஆட்சியர் காண்பித்தார். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Private firm employees road blocking protest in chennai bengaluru highway

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com