காரமடை அருகே உள்ள சிக்காரம்பாளையம் ஊராட்சியில் தனியாருக்கு சொந்தமான சிப்ஸ் கம்பெனி செயல்பட்டு வந்தது.இந்த நிறுவனத்தில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக வங்கி நிறுவனத்தை கையகப்படுத்தியது.
இந்த நிறுவனம் கடந்த பல மாதங்களாக செயல்படாமல் இருந்து வந்த நிலையில் தற்போது புதிய உரிமையாளர் அதனை வாங்கி பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.இந்த நிலையில் நேற்று மாலை இந்த நிறுவனத்தில் உள்ள பிளான்ட்டில் இருந்து அமோனியா கேஸ் கசிவு ஏற்பட்டுள்ளது.
இதனால் இரண்டு கிமீ தொலைவிற்கு சுற்றுவட்டாரப்பகுதிகளில் வசித்த மக்கள் கண் எரிச்சல்,மூச்சுத்திணறல், சுவாசப் பிரச்சினைகளால் அவதிப்பட்டனர்.மேலும், என்ன ஆச்சோ? ஏதாச்சோ? என்று பயத்தில் தங்களது வீடுகளை விட்டு அவசர, அவசரமாக வெளியேறினர்.
இதனால் அங்கு ஒருவிதமான பதட்டமான சூழல் ஏற்பட்டது.இந்த நிலையில் இச்சம்பவம் குறித்து அறிந்த மேட்டுப்பாளையம் தீயணைப்புத்துறையினர்,காரமடை காவல்துறையினர் விரைந்து வந்து சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர்.தீயணைப்புத்துறையினர் கவண உடை அணிந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து பரவலை கட்டுப்படுத்தினர்.நிறுவன ஊழியர்கள் கேஸ் கசிவை கட்டுப்படுத்தினர்.
மேலும் கோவையிலிருந்து கோவை வடக்கு கோட்டாட்சியர் கோவிந்தன் தலைமையிலான வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவ இடத்தில் 108 ஆம்புலன்ஸ்கள்,தீயணைப்பு வாகனங்கள் மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.இதனால் சிக்காரம்பாளையத்தில் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து அப்பகுதியைச்சேர்ந்த மக்கள் கூறுகையில் நீண்ட நாட்களாக செயல்படாமல் இருந்து வந்த இந்த நிறுவனத்தில் தற்போது புதிய உரிமையாளர் அதனை விலைக்கு வாங்கி பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வந்திருக்கிறார். அப்போது அங்கு இருந்த அம்மோனியா சிலிண்டரில் இருந்து கேஸ் கசிந்து வீடுகளுக்குள் இருக்க முடியாத அளவிற்கு கண்ணெரிச்சல்,மூச்சுத்திணறல்,சுவாச பிரச்சனைகள் ஏற்பட்டது. இதனையடுத்து அங்கிருந்து நாங்கள் அனைவரும் 2 கிமீ தாண்டி எங்களது உறவினர் வீடுகளுக்கு சென்று விட்டோம். தற்போதும் அந்த நிறுவனத்தில் கேஸ் கசிவு நின்ற பாடில்லை.
இதுகுறித்து சம்பவ இடத்தில் கோட்டாட்சியர் கோவிந்தன் தலைமையிலான வருவாய்த்துறையினர், போலீசார்,தீயணைப்புத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மாலை நேரத்தில் ஏற்பட்ட இந்த கேஸ் கசிவால் எங்கள் பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினோம்.இந்த நிறுவனத்தை முழுமையாக பரிசோதித்த பின்னரே செயல்பட அனுமதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.