கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் அருகே தனியார் பள்ளியில் படித்து வந்த 12 ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இன்று மாணவியின் உடல் பிரேதப் பரிசோதனை முடிவடைந்த நிலையில், மாணவியின் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம், பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீமதி என்பவர் கள்ளக்குறிச்சி மாவட் டம், சின்னசேலம் அருகே உள்ள கனியாமூரில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விடுதியில் தங்கி பிளஸ் 2 படித்து வந்தார். நேற்று முன்தினம் (ஜூலை 13) அதிகாலை விடுதியின் 2-வது மாடியிலிருந்து இருந்து விழுந்து மாணவி ஸ்ரீமதி உயிரிழந்தார். அவர் அங்கிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால், மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்றும் ஆனால், உடலில் காயங்கள் இருந்ததாகவும் தகவல் வெளியானது. இதனால், மாணவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் வலியுறுத்தினர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மாணவியின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாணவியின் மரணம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
மாணவி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, தனியார் பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த மற்ற மாணவ, மாணவிகளை அவர்களுடைய பெற்றோர் தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.
மாணவி ஸ்ரீமதி உயிரிழப்பு தொடர்பாக 2 ஆசிரியைகள் மற்றும் ஒரு ஆண் ஆசிரியரிடம் சின்னசேலம் போலீஸார் விசாரணை நடத்தினர்.
இதனிடையே, மாணவி உயிரிழந்ததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மாணவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும், பிரேத பரிசோதனை அறிக்கைக்குப் பிறகே மாணவியின் உடலை வாங்குவோம் என பெற்றோர் தெரிவித்து நேற்று (ஜூலை 14) சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீஸார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியதை அடுத்து, மறியலைக் கைவிட்டனர்.
இந்த நிலையில், மாணவியின் உடல் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நிறைவடைந்த நிலையில், மாணவியின் உடலை வாங்க பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மறுப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் தலைமையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”