Private schools association calls strike against Kallakuruchi school attack: கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மரண விவகாரத்தில் தனியார் பள்ளி சேதப்படுத்தப்பட்டதைக் கண்டித்து, நாளை முதல் தனியார் பள்ளிகள் இயங்காது என தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீமதி என்ற மாணவி கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விடுதியில் தங்கி பிளஸ் 2 படித்து வந்தார். கடந்த 13-ம் தேதி மாணவி விடுதியின் 2-வது மாடியிலிருந்து குதித்து மரணம் அடைந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், மாணவி குதித்து மாடியில் இருந்து குதித்து உயிரிழந்ததற்கான அடையாளம் இல்லை. மாணவியின் உடலில் காயங்கள் இருப்பதாகவும் மாணவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக பெற்றோர்களும் உறவினர்களும் சந்தேகங்களை எழுப்பினர்.
இதையும் படியுங்கள்: கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றம் – டி.ஜி.பி
பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, சின்னசேலம் போலீஸார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி, மாணவியின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மாணவியின், பிரேத பரிசோதனை அறிக்கை நேற்று (ஜூலை 16) வெளியான நிலையில், அந்த அறிக்கை போலியானது என்று கூறி, மாணவியின் பெற்றோர், மகளின் உடலை வாங்க மறுப்பு தெரிவித்தனர். இதனிடையே, சின்ன சேலம் அருகே உள்ள கனியாமூர் தனியார் பள்ளியில் மாணவி மர்மமான முறையில் உயிரிழந்ததற்கு, நீதி கேட்டு மாணவியின் உறவினர்கள், பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம், கல்வீச்சு, பேருந்துகளுக்கு தீவைப்பு என கலவரமாக மாறியதால் போலீசார் தடியடி நடத்தி கலவரத்தைக் கட்டுப்படுத்தினர். பள்ளி முழுமையாக சேதப்படுத்தப்பட்ட நிலையில், பள்ளியின் அனைத்து பேருந்துகளும் தீ வைத்து கொளுத்தப்பட்டன.
இந்த நிலையில், இந்த தாக்குதலைக் கண்டித்து தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேசன் பள்ளிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாளை முதல் தமிழகத்தில் உள்ள நர்சரி, பிரைமரி, மெட்ரிக்குலேசன் மற்றும் சி.பி.எஸ்.இ பள்ளிகள் இயங்காது, கள்ளக்குறிச்சி பள்ளி தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கிறோம். தனியார் பள்ளிகளுக்கு அரசு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட பள்ளிக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து நாளை முதல் தனியார் பள்ளிகளில் மூடப்படும் என்ற அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளி ஆசிரியர் மற்றும் நிர்வாகிகள் கருப்பு பேட்ஜ் அணிந்த சம்பந்த மாவட்ட ஆட்சியர்களிடம் மனு அளிக்க உள்ளனர். மேலும், மருத்துவமனைகளுக்கு வழங்கப்படுவது போன்ற பாதுகாப்பு பள்ளிகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்று அவர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
தமிழக அரசு தனியார் பள்ளி கூட்டமைப்பை அழைத்து பேசி, பாதுகாப்பை உறுதி செய்யாத வரையில் தொடர்ந்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் தலைவர் நந்தக்குமார் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் பள்ளி கல்வித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில், தனியார் பள்ளிகள் மூடப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறி தனியார் பள்ளிகள் விடுமுறை அளித்தால், நடவடிக்கை எடுக்கப்படும் என மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, சென்னை, தலைமை செயலகத்தில் தனியார் பள்ளிகள் சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் நாளை பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil