சென்னை எம்.ஜி.ஆர் நகரில் சாலையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்து படுகாயம் அடைந்த தனியார் தொலைக்காட்சி ஊழியர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
சென்னையில் பருவமழையை எதிர்கொள்ளும் வகையில், பல்வேறு பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னை எம்.ஜி.ஆர் நகரில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மழைநீர் வடிகால் அமைப்பதற்காக சென்னை எம்.ஜி.ஆர் நகரில் சாலையில் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னையில் உள்ள பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த முத்துக்கிருஷ்ணன் என்ற இளைஞர் சனிக்கிழமை (அக்டோபர் 22) இரவு பணி முடிந்து வீட்டுக்கு சென்றார். அப்போது சென்னை எம்.ஜி.ஆர் நகரில் மழைநீர் வடிகால் அமைப்பதற்காக சாலையில் தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்தார். இதில், பள்ளத்தில் இருந்த இரும்பு கம்பிகள் முத்துக்கிருஷ்ணனின் உடலில் குத்தியதால் அவர் படுகாயம் அடைந்தார்.
உடனே அருகே இருந்தவர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர். சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு நேரடியாக சென்று காயம் அடைந்த முத்துக்கிருஷ்ணனுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு அறிவுறுத்தினார்.
மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து படுகாயம் அடைந்த முத்துக்கிருஷ்ணனுக்கு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில், தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பல மருத்துவ நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில், முத்துக்கிருஷ்ணன் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 23) உயிரிழந்தார்.
சென்னை மாநகராட்சி முழுவதும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளுக்காக பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ள நிலையில், எம்.ஜி.ஆர் நகரில் மழைநீர் வடிகால் பள்ளத்தில் தனியார் தொலைக்காட்சி ஊழியர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“