சென்னையில், கால்பந்து மைதானங்களை தனியார் மயமாக்குதல் தீர்மானத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால், அது தொடர்பான தீர்மான திரும்பப் பெறப்பட்டது.
சென்னை மாநகராட்சியின் அக்டோபர் மாதத்திற்கான மாதாந்திர மாமன்றக் கூட்டம், மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 79 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இவற்றில், சென்னை மாநகராட்சி பராமரிப்பில் இருக்கும் செயற்கை புல் கொண்ட 9 கால்பந்து விளையாட்டு மைதானங்களை, தனியார் வசம் பராமரிப்புக்காக வழங்க முடிவு செய்திருப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த கால்பந்து மைதானங்களில் நபர் ஒருவருக்கு, ஒரு மணி நேரத்திற்கு குறைந்தபட்சம் ரூ 120 கட்டணம் வசூலிப்பது எனவும், 10 பேர் கொண்ட குழுவாக விளையாடும் பட்சத்தில் ஒரு மணி நேரத்திற்கு ரூ. 1,200 வசூலிக்கப்படும் எனவும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதற்காக மாநகராட்சியின் அரங்கதுறையின் வாயிலாக டெண்டர் விடப்படுமென தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த தீர்மானத்திற்கு திமுக கூட்டணி கட்சிகளான விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் ஆகியோருடன் சேர்ந்து அதிமுகவினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், கால்பந்து விளையாடி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இதன் தொடர்ச்சியாக, செயற்கை புல் கால்பந்து விளையாட்டு மைதானங்கள் தனியார் வசம் ஒப்படைக்கபடும் என்ற தீர்மானம் திரும்பப் பெறப்பட்டது. பல்வேறு அரசியல் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்ததால், தீர்மானத்தை திரும்பெற்றதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“