கால்பந்து வீராங்கனை மாணவி பிரியா தவறான சிகிச்சையா உயிரிழந்தது தொடர்பான மருத்துவ அறிக்கை காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. அதில், மருத்துவர்களின் கவனக் குறைவு காரணமாக மாணவி பிரியா உயிரிழந்தார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை வியாசார்பாடியைச் சேர்ந்த பிரியா, கால்பந்து வீராங்கனையாக வேண்டும் என்ற கனவுடன் இருந்தவர். ராணி மேரி கல்லூரியில் படித்து வந்த மாணவி பிரியாவுக்கு கால் முட்டியில் அறுவை சிகிச்சை செய்தபோது தவறான சிகிச்சை அளித்ததால், அவருடைய கால் அகற்றப்பட்டு பின்னர், சிகிச்சை பலனின்றி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நவம்பர் 15ம் தேதி உயிரிழந்தார். மாணவியின் மரணத்திற்கு காரணமான மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவருடைய குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினர்.
இதையடுத்து, தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்கள் பால்ராம் சங்கர், சோமசுந்தரம் இருவரும் முதலில் பணியிட மற்றாம் செய்யப்பட்டனர். பின்னர், இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
மேலும், மாணவி பிரியா உயிரிழந்தது தொடர்பாக விசாரித்து அறிக்கை அளிக்க தமிழக அரசு ஒரு மருத்துவக் குழு அமைத்து உத்தரவிட்டது. மாணவியின் மரணம் குறித்து முழுமையான மருத்துவ அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், மாணவி பிரியா மரணம் தொடர்பாக விசாரணை நடத்திய மருத்துவக் குழுவின் அறிக்கை வியாழக்கிழமை (நவம்பர் 17) காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
கால்பந்து வீராங்கனை மாணவி பிரியாவுக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால், அவருடைய கால் அகற்றப்பட்டு பின்னர் அவர் உயிரிழந்ததற்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களின் கவனக் குறைவே காரணம் என்று மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், அந்த அறிக்கையில், மாணவி பிரியாவுக்கு மயக்க மருந்து செலுத்திய மருத்துவர், பணியில் இருந்த செவிலியர், சுழற்சி முறையில் இருந்த மருத்துவர்கள், செவிலியர்களும் கவனக் குறைவாக செயல்பட்டனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மாணவிக்கு அளித்த சிகிச்சையில் கவனக்குறைவாக செயல்பட்டவர்களின் பட்டியலில், அறுவை சிகிச்சை செய்த 2 மருத்துவர்கள் தவிர, மயக்க மருந்து செலுத்திய மருத்துவர், அன்றைய தினம் மருத்துவமனையில் இருந்த மருத்துவ அதிகாரி, அன்றைய தினம் மருத்துவமனையில் எலும்புமுறிவு பிரிவில் இருந்த மருத்துவ அதிகாரி, அறுவை சிகிச்சைகுப் பிறகு, பிரியா அனுமதிக்கப்பட்டிருந்த வார்டில் இருந்த செவிலியர்கள், மருத்துவர்கள் அனைவரும் கவனக்குறைவாக செயல்பட்டது இந்த அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.
மாணவி பிரியாவின் மரணம் ஏற்கெனவே சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், காவல்துறை இந்த மருத்துவ அறிக்கையின்படி, சட்ட வல்லுநர்களிடம் ஆலோசனை நடத்தி, இந்திய தண்டனைச் சட்டம் 304ஏ பிரிவின்கீழ் கவனக்குறைவாக செயல்பட்டு மரணத்தை விளைவித்தால் என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து காவல்துறை அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க உள்ளது.
மேலும், மருத்துவ அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அனைவருக்கும் சம்மன் அனுப்பப்படும். இந்த சம்மனுக்கு ஆஜராகவில்லை என்றால் காவல்துறை கைது நடவடிக்கை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"