அஜித்தின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற வந்த தேமுதிக பொது செயலாளர் செய்தியாளர்களை சந்தித்தபோது இவ்வாறு கூறினார். மேலும், மடப்புரத்தில் ஒரு அப்பாவி இளைஞர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவித்தவர், இதில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கட்டாயம் தண்டிக்கப்படவேண்டும், விசாரணை கைதி கொலை இனி தமிழ்நாட்டில் நடக்ககூடாது என்றும் கூறினார்.
நிக்கிதா என்ற பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் தான் இவ்வளவு செய்திருக்கிறார்கள். முதலில் அந்தப் பெண்ணை அழைத்து விசாரணை நடத்த வேண்டும் என்ற பிரேமலதா விஜயகாந்த், அஜித் குமார் கொலை வழக்கில் பின்னால் பல மர்மங்கள் உள்ளதாகவும் அந்த மர்மங்கள் வெளிப்பட வேண்டும் என்றார்.
உண்மை நிலவரம் மக்களுக்கு தெரிய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். தமிழக அரசு, அறநிலையத்துறை, காவல்துறை என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? என்றவர், காவல் துறையினர் விசாரணை கைதிகளை அடிப்பதை முதலில் நிறுத்தி கொள்ள வேண்டும் என்றார்.
வீட்டுமனை பட்டா, தம்பிக்கு வீடு கொடுப்பதால் போன உயிரை திரும்பி வருமா? என்றும் கேள்வி எழுப்பினார். புதிய சட்டம் இயற்றி காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்து வருபவர்களை அடிக்கும் உரிமையை பறிக்க வேண்டும், தனிப்படையை கலைத்திருந்தாலும் கடுமையான சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்றார்.
விஜய் குறித்த கேள்விக்கு, விஜய் சொல்லும் கருத்துக்கு நான் பதில் சொல்ல முடியாது, கட்சித் தலைவர்கள் அனைவரும் அடுத்த தேர்தலையும் அடுத்த வெற்றியை பற்றித்தான் கவலைப்படுகிறார்கள். தமிழக
மக்களைப் பற்றி கவலைப்படுவதில்லை என்று கவலை தெரிவித்தார். தமிழகத்தில் 95 சதவிகிதம் டாஸ்மாக்,போதை பொருள் கலாச்சாரம் பெருகிவிட்டது.
அதனை திசைதிருப்ப இரண்டு அப்பாவி நடிகர்களை பலி கடா ஆக்கியுள்ளதாக கூறியவர், தேமுதிகவின் சார்பில் ஜனவரி 9 கடலூரில் நடக்கும் மாநாடு மிகப்பெரிய வெற்றி மாநாடாக அமையும் என்று உறுதிபட தெரிவித்தார்.