இந்திய முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் இறப்பு குறித்து அவதூறு பரப்பியதாக பாகிஸ்தானிய ட்விட்டர் கணக்குகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
குன்னூர் அருகே ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் ஜெனரல் பிபின் ராவத், துணைவியார் மதுலிகா ராவத் மற்றும் உடன் பயணித்த 11 படை வீரர்களும் உயிரிழந்ததனர். இந்த விபத்தில் படுகாயமடைந்த கேப்டன் வருண்சிங் வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. விபத்து குறித்து விமானப்படையினரும், காவல் துறையினரும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
இதற்கிடையில், பிபின் ராவத் மரணம் குறித்து சமூக ஊடகங்களில் பலரும் விதவிதமாக கருத்துதெரிவித்து மக்களிடைய தவறான தகவலை பரப்புவருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அதன்படி, வேர்ல்டு கான்பிளிக்ஸ் மானிட்டரிங் சென்டர்(worldbreakingN9), பாகிஸ்தான் ஸ்ட்ரட்டெஜிக் பாரம்(@ForumStrategic) ஆகிய இரண்டு ட்விட்டர் கணக்குகளில், தவறான மற்றும் அவதூறான செய்திகளை பரப்பி, பயங்கரவாதத்தை ஊக்குவிக்க வழிவகை செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக சிபிசிஐடி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதில் worldbreakingN9 ட்விட்டர் கணக்கு, ஹெலிகாப்டர் மீது ஏதோ மோதியதன் காரணமாக விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே, ஹெலிகாப்டர் விபத்து குறித்து வதந்திகளை பரப்பும் வகையில் தகவல்களை வெளியிட வேண்டாம், என்று இந்திய விமானப்படை அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
ஆனால், அதை மீறி தவறான கருத்துக்கள் பரப்பியதாக தமிழகத்தில் யூடியூபர் மாரிதாஸ் உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil