திடக்கழிவுகளை ஆற்றாலாக மாற்றும் திட்டத்தில் முதலீடு செய்தால் பல மடங்கு லாபம் கிடைக்கும் எனக் கூறி ஏமாற்றியதாகக் திரைப்படத் தயாரிப்பாளர் ரவீந்தர் மீது புகார் கொடுக்கப்பட்டிருந்தது. 16 கோடி ரூபாய் ஏமாற்றியதாக பாலாஜி என்பவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். போலி ஆவணங்களைக் காண்பித்து பணத்தைப் பெற்று மோசடி செய்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்த நிலையில், கடந்த 7ம் தேதி தயாரிப்பாளர் ரவீந்தர் கைது செய்யப்பட்டு எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் சின்னத்திரை நடிகையும் தயாரிப்பாளர் ரவீந்தரின் மனைவியுமான மகாலட்சுமி தன் கணவருக்கு ஜாமீன் வேண்டும் என மனுத்தாக்கால் செய்திருந்தார். அந்த மனுவை தற்போது நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. ரவீந்தர் சார்பாக இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. ஒன்று அவருக்கு ஜாமீன் கேட்டு, மற்றொன்று சிறையில் முதல் வகுப்பு அறை வேண்டும் எனத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த இரண்டு மனுக்கள் மீதான விசாரணையும் கடந்த 2 நாட்களாக நடைபெற்ற நிலையில், தற்போது எழும்பூர் நீதிமன்ற மத்திய குற்றப்பிரிவு வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி ரேவதி, இந்த மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்திருக்கிறார். இந்த வழக்கில் அவரை விடுவித்தால் சாட்சிகளை அவர் அழிக்கக்கூடும் என மத்திய குற்றப்பிரிவு காவல்துறை வாதங்களை முன்வைத்ததன் அடிப்படையில் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“