திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே ஓ.என்.ஜி.சி நிறுவனம் எண்ணெய் குழாய் அமைப்பதை கண்டித்து போராட்டம் நடத்த முயன்றதாக, மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் உட்பட நான்கு பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
நன்னிலம் அருகே தென்னஞ்சாறு எனும் கிராமத்தில் விளைநிலங்களுக்கு நடுவே ஓ.என்.ஜி.சி. நிறுவனம் எண்ணெய் குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து இரண்டு, மூன்று மாதங்களாக கடையடைப்பு உள்ளிட்ட பல்வேறு கட்ட போராட்டங்களில் கிராம மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஓ.என்.ஜி.சி.க்கு எதிராக போராட மக்களை தூண்டுவதாக ஏற்கனவே பேராசிரியர் ஜெயராமன் மீது வழக்கு உள்ளது. மேலும், அந்த இடத்திற்கு ஜெயராமன் வரக்கூடாது என உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், இன்று காலை (திங்கள்கிழமை) ஓ.என்.ஜி.சி.க்கு எதிராக போராட கிராம மக்களை அழைத்துவர சென்றதாக கூறி, பேராசிரியர் ஜெயராமன், அவரது மனைவி சித்ரா உள்ளிட்ட 4 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
அவர்களின் கைதை எதிர்த்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பேராசிரியர் ஜெயராமன் கைது செய்யப்பட்டதற்கு ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பை சேர்ந்த பொறியாளர் சுந்தரராஜன் தன் முகநூல் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் கடந்த ஜூலை மாதம் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு எதிராக போராடிய பேராசிரியர் ஜெயராமன் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதன்பின், ஒரு மாதம் கழித்து அவர் ஜாமீனில் வெளியே வந்தார். அதன்பின், ’நதிகள் இணைப்பு திட்டம் - ஆறுகளை பிடுங்கி விற்கும் இந்தியா’ என்ற பெயரில் பேராசிரியர் ஜெயராமன் எழுதிய புத்தகம் இந்திய இறையாண்மைக்கு எதிரானது எனக்கூறி அவர் மீது சில நாட்களுக்கு முன்பு வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.