Advertisment

இனமான இமயம் உடைந்துவிட்டது': பேராசிரியர் மறைவுக்கு மு.க.ஸ்டாலின்- தலைவர்கள் இரங்கல்

பச்சையப்பன் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிய க.அன்பழகன், பெரியாரின் சமூக எழுச்சியில் ஆர்வம் கொண்டு கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
karunanidhi - anbazhagan

திமுக பொதுச் செயலாளரும், கழகத்தின் இனமானப் பேராசரியர் என்று அன்போடு அழைக்கப்படும் க.அன்பழகன் இன்று அதிகாலை ஒரு மணி அளவில் இயற்கை எய்தினர். துக்கம் தாங்காமல் மு.க.ஸ்டாலின் கண்ணீர் விட்டு அழ, ஏராளமான தி.மு.க. தொண்டர்கள் மருத்துவமனையில் திரண்டனர். அதனை தொடர்ந்து க. அன்பழகனின் உடல் கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டது.

Advertisment

அங்கு பொது மக்களும், கழகத்தினரும், அரசியல் தலைவர்களும் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

பச்சையப்பன் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிய க.அன்பழகன், பெரியாரின் சமூக எழுச்சியில் ஆர்வம் கொண்டு கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.

திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களை கழக செயல் தலைவராக முன்மொழிந்த க. அன்பழகன்  வீடியோ:  

1957-ம் ஆண்டு முதல் 1962-ம் ஆண்டு வரை சட்டமன்ற மேலவை உறுப்பினராக(எம்.எல்.சி.) இருந்தார். 1967-ம் ஆண்டு முதல் 1971-ம் ஆண்டு வரை நாடாளுமன்ற தி.மு.க. உறுப்பினராக இருந்தார். 1971-ம் ஆண்டு முதல் 1984-ம் ஆண்டு வரை புரசைவாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.வாகவும், 1984-ம் ஆண்டு முதல் 1989-ம் ஆண்டு வரை பூங்காநகர் தொகுதி எம்.எல்.ஏ.வாகவும், 1989-ம் ஆண்டு முதல் 1991-ம் ஆண்டு வரை அண்ணாநகர் தொகுதி எம்.எல்.ஏ.வாகவும், 1996-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை துறைமுகம் தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் பணியாற்றினார்.

அரசியல் தலைவர்கள் அஞ்சலி:  

கீ.வீரமணி: திராவிடக் கழக தலைவர் கீ.வீரமணி, பேராசிரியர் க.அன்பழகன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தவர்கள், கொள்கைக் குடும்பத்துத் தலைவர் தளபதி உட்பட அனைவரது துயரத்திலும், தாய்க்கழகம் பங்குபெற்று, நாம் ஒருவரை ஒருவர் தேற்றிக் கொண்டு, இலட்சியச் சுடரை அணையாது காத்து, கொள்கைப் பயணத்தை தொடருவோமாக! பேராசிரியர் என்றும் நமக்கு மங்காத ஒளியாவார்! பாடம் எடுக்கும் பாசறையின் மங்காத முழக்கம்! அவர் வரலாறாகி வழிகாட்டுவார், என்று கூறியுள்ளார்.

ஸ்டாலின் இரங்கல் கடிதம் : 

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க ஸ்டாலின் தனது இரங்கல் கடிதத்தில் -

திராவிடச் சிகரம் சாய்ந்துவிட்டது.

சங்கப் பலகை சரிந்துவிட்டது

இனமான இமயம் உடைந்து விட்டது.

எங்கள் இன்னுயிர் ஆசான் இறந்துவிட்டார்.

என்ன சொல்லித் தேற்றுவது ?

எம் கோடிக்கணக்கான் கழகக் குடும்பத்தினரை ?

தலைவர் கலைஞர் அவர்கள் என்னை வளர்த்தார்!

பேராசரியர் பெருந்தகையோ என்னை வார்ப்பித்தார்!

எனக்கு உயிரும் உணர்வும் தந்தவர் கலைஞர்;

எனக்கு ஊக்கமும் உற்சாகமும் ஊட்டியவர் பேராசிரியர்.

இந்த நான்கும்தான் என்னை இந்த இடத்தில் இருத்தி வைத்துள்ளது

"எனக்கு அக்காள் உண்டு, அண்ணன் இல்லை

பேராசரியர் தான் என் அண்ணன்" என்றார் தலைவர் கலைஞர்!

எனக்கும் அத்தை உண்டு, பெரியப்பா இல்லை.

பேராசரியப் பெருந்தகையை பெரியப்பாகவே ஏற்று வாழ்ந்தேன்.

அப்பாவை விட பெரியப்பாவிடம் நல்ல பெயர் வாங்குவது தான் சிரமம்

ஆனால், நானோ, பேராசிரியர் பெரியப்பா வினால் தான் அதிகம் புகழப்பட்டேன். அவரே என்னை முதலில்

கலைஞருக்குப் பின்னால் தம்பி ஸ்டாலின் தலைவர்" என்று அறிவித்தார்.

எனது வாழ்நாள் பெருமையை எனக்கு வழங்கிய பெருமகன் மறைந்தது என் இதயத்தை பிசைகிறது

அப்பா மறைந்த போது

பெரியப்பா இருக்கிறார் என்று ஆறுதல் பெற்றேன்.

இன்று பெரியப்பாவும் மறையும் போது

என்ன சொல்லி என்னை நானே ஆறுதல் சொல்வேன்?!

பேராசரியர் இருக்கிறார் என்று நம்பிக்கையோடு இருந்தேன்

இனி யாரிடம் ஆலோசனைக் கேட்பேன்?

இனி யாரிடம் பாராட்டுப் பெறுவேன் ?

என்ன சொல்லி என்னை நானே தேறுதல் கொள்வேன்?!

பேராசரியர் பெருந்தைகயே !

நீங்கள் ஊட்டிய

இனப்பால் - மொழிப்பால் - கழகப்பால்

இம் முப்பால் இருக்கிறது.

அப்பால் வேறு என்ன வேண்டும்.? !

உங்களது அறிவொளியில்

எங்கள் பயணம் தொடரும்

பேராசிரியப் பெருந்தகையே!

என்று ட்விட்டேரில் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

ப.சிதம்பரம்: 

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்  ப.சிதம்பரம் தனது  ட்விட்டர் பதிவில்,

திமு கழகத்தின் மூத்த தலைவர் மற்றும் 47 ஆண்டு கால பொதுச்செயலாளர் பேராசிரியர் திரு அன்பழகன் அவர்களின் மறைவு குறித்து என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று ப.சிதம்பரம் தனது ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

டிடிவி தினகரன்:  

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டரில்,

 

தமிழகத்தின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான அன்னாரது மறைவால் வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று டிடிவிதினகரன் தனது ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

கமல்ஹாசன் : 

மக்கள் நீதி மய்யத்தின் தலைவரான கமல்ஹாசன் தனது வருத்தத்தை ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் முதுபெரும் தலைவர், திராவிட சிந்தனையின் தெளிவுரை, ஏற்றுக்கொண்ட இயக்கத்தில் இறுதிவரை உறுதியோடு இருந்தவர், பேராசிரியர் திரு.அன்பழகன் அவர்களின் இழப்பு வேதனைக்குரியது என்று தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”  

K Anbazhagan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment