மாணவிகளின் வாழ்க்கையைச் சீர்குலைக்கும் வகையில் அவர்களைத் தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல நிர்மலா தேவிக்கு துணையாக இருந்த உதவி பேராசிரியர் முருகன் இன்று சாத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இவரை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டது.
கல்லூரி மாணவிகளைத் தவறாக பயன்படுத்தும் முயற்சியில் பேராசிரியை நிர்மலா தேவி ஈடுபட்டார். இந்த விவகாரத்தில் தனது ஆடியோ மற்றும் வாட்ஸ் அப் தொடர்பின் ஆதாரங்களோடு கையும் களவுமாக இவர் பிடிபட்டார். நிர்மலா மீதான இந்தக் குற்றச்சாட்டு விஷ்வரூபம் எடுத்ததைத் தொடர்ந்து அருப்புக்கோட்டை போலீசார் அவரைக் கைது செய்து விசாரித்தனர். அந்த விசாரணையில் நிர்மலாவின் செல்போன்களில் முக்கிய தொடர்பு எண்கள் இருப்பதும், அதில் நடைபெற்றிருந்த உரையாடல்களாலும் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, சிபிசிஐடி போலீசார் அவரை 5 நாள் காவலில் எடுத்து விசாரித்தனர். இந்த விசாரணையில் இவருக்கு இரண்டு நபர்கள் உதவியாகத் தெரிவித்தார். அதில் ஒருவர் உதவி பேராசிரியர் முருகன் மற்றுமொரு நபர் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி. தலைமறைவாக இருந்த இவர்கள் இருவரையும் காவல்துறையினர் தேடி வந்தனர். அதில் நேற்று முன்தினம் நள்ளிரவில் முருகன் போலீசாரிடம் சிக்கிக் கொண்டார்.
இவரிடம் நடைபெற்ற விசாரணையில் பல தகவல்கள் தெரிய வாய்ப்புள்ளதாக அறிந்த போலீசார், இவரை 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சாத்தூர் நீதிமன்றத்தில் மனு அளித்தனர்.
மேலும் நிர்மலா தேவியின் 5 நாள் காவல் நிறைவடைந்த நிலையில், இன்று சாத்தூர் நீதிமன்றத்தில் நீதிபதி கீதா முன்பு நிர்மலா மற்றும் முருகனை ஆஜர்ப்படுத்தினர். அப்போது முருகனின் விசாரணை காவல் குறித்த மனுவை ஏற்கொண்ட நீதிபதி, அவரை 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தார்.
இதனைத் தொடர்ந்து சிபிசிஐடி முருகனை 5 நாள் காவலில் வைத்து விசாரணை நடத்தும் என்று தெரிய வந்துள்ளது. முருகனை தொடர்ந்து ஆராய்ச்சி மாணாவர் கருப்பசாமியும் தற்போது சரணடைந்துள்ள நிலையில் அவர் நாளை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளார். கருப்பசாமியையும் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே, முருகன் மற்றும் கருப்பசாமி ஆகியோரிடம் தீவிர விசாரணையில் சிபிசிஐடி காவலர்கள் ஈடுபட உள்ளனர்.