அருப்புக்கோட்டையில் மாணவிகளைத் தவறான வழியில் அழைத்துச் செல்ல முயன்ற பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில், கடந்த 16ம் தேதி மாலை 6 மணிக்கு வீட்டின் பூட்டை உடைத்து நிர்மலா தேவியை போலீசார் கைது செய்தனர். பின்பு, இரவு முழுவதும் விசாரணை நடத்திய போலீசார், அவரது இரண்டு செல்போன்களை ஆய்வு செய்தனர். அதில் முக்கிய புள்ளிகளின் தொடர்பு எண்கள் இருந்ததால் அதிர்ச்சியடைந்த போலீசார் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டனர். இதனைத் தொடர்ந்து வரும் 28ம் தேதி வரை நிர்மலா தேவியை மதுரை சிறையில் அடைத்து வைக்க உத்தரவு அளிக்கப்பட்டது.
இந்த வழக்கில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் உத்தரவின் பேரின், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆர். சந்தானம் விசாரணைக்கு நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் வழக்கின் விசாரணை அதிகாரியாக மதுரை சிபிசிஐடி துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துசங்கரலிங்கம் நியமிக்கப்பட்டு இருக்கிறார். இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் தனியாக ஒரு வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்குவர்.
தற்போது மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிர்மலா தேவியை, தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ள சிபிசிஐடி போலீசார், இதற்கான நடவடிக்கையை அடுத்த சில தினங்களில் மேற்கொள்ள இருக்கின்றனர். இன்று அருப்புக்கோட்டை கல்லூரியில் சந்தானம் தனது விசாரணையைத் துவங்குகிறார். இந்த வழக்கின் விசாரணை அனைத்தையும் முடித்து, இம்மாதம் 30ம் தேதி விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்கிறார்.
தற்போது சிபிசிஐடி மற்றும் சந்தானம் ஆகிய இருவரும் தீவிர விசாரணையில் களமிறங்கியுள்ளதால் இந்த வழக்கு விசாரணையின் அடுத்த நிலையை அடைந்துள்ளது. 30ம் தேதி வெளிவரும் விசாரணை அறிக்கையில் நிர்மலா குறிப்பிட்ட உயர் அதிகாரிகள் என்ற தகவல்கள் வெளியிடப்படுமா என்ற கேள்விகள் எழுந்து வருகிறது.