மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள பேராசிரியை நிர்மலா தேவியிடம் இன்று குரல் பரிசோதனை நடத்தப்பட்டது.
அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. இந்த விவகாரத்தில் ஆளுநர் உட்பட பெரும் புள்ளிகள் பலருக்கும் தொடர்பு இருப்பதாக செய்திகள் உலா வர தொடங்கின. இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கு வகையில் ஆளுநர் இதுகுறித்து விசாரணை நடத்த தனி குழு ஒன்றை அமைத்தார்.
அதன் பின்பு, நிர்மலா தேவியின் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. சிறையில் உள்ள நிர்மலா தேவியிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் தொடர்புடைய மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில், மாணவிகளை ஆசை வார்த்தை காட்டி அழைத்ததாக வெளியான ஆடியோ பதிவில் இருக்கும் குரல் நிர்மலா தேவியின் குரலா? என்று அறிவதற்கு இன்று குரல் பரிசோதனை நடத்தப்பட இருந்தது.
இதற்காக செல்போனில் பதிவானது போலவே நிர்மலா தேவியை பேச சொல்லி குரலை பதிவு செய்து, அதனை ஆடியோவில் பதிவான முந்தைய உரையாடலுடன் ஒப்பிட்டு தடய அறிவியல் நிபுணர்கள் சோதனை செய்ய உள்ளனர். இதற்காக நிர்மலா தேவி மதுரை மத்திய சிறையில் இருந்து சென்னைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார்.
மயிலாப்பூரில் உள்ள தடயவியல் துணை இயக்குநர் முன் குரல் பரிசோதனை எடுக்கப்பட உள்ளது. இந்த சோதனை முடிந்தபின் நாளை (29.6.18) நிர்மலாதேவி மீண்டும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்படுவார்.குரல் மாதிரி பரிசோதனை முடிவுகள் கிடைத்த பின் மதுரை ஐகோர்ட்டு கிளையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் அதனை தாக்கல் செய்ய உள்ளனர்.
நிர்மலா தேவியிடம் குரல் பரிசோதனை :
சென்னை மயிலாப்பூரில் டிஜிபி அலுவலகம் அருகே தடய அறிவியியல் சோதனை பிரிவு அலுவலகத்தில் பகல் 11.30 மணியளவில் நிர்மலா தேவியிடம் குரல் பரிசோதனை நடந்தது. இதற்காக பாதுகாப்புடன் அவர் அழைத்து வரப்பட்டார். நிர்மலா தேவியிடம் நடந்த குரல் பரிசோதனை முடிவுகள் வர சில நாட்கள் ஆகலாம். இந்த வழக்கின் முக்கிய சாட்சியாக அது இருக்கும்.
இந்நிலையில், சென்னை மயிலாப்பூர் தடய அறிவியல் அலுவலகத்தில் நிர்மலா தேவியிடம் சுமார் 3 மணி நேரம் நடந்த குரல் மாதிரி சோதனை முடிந்தது.