தமிழகத்தில் அரசு பள்ளியில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் பணி நிரந்தரம், சம ஊதியம், காலிப் பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட கோரிக்கையை முன்வைத்து கடந்த 28ம் தேதி முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை, டி.பி.ஐ வளாகத்தில் சுமார் 4,000 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. 3 வது நாளாக நடந்து வரும் போராட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயங்கி விழுந்தனர். இவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் கீழ்பாக்கம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் இதுவரை 70 மேற்பட்ட ஆசிரியர்கள் போராட்டக்களத்தில் மயங்கி விழுந்துள்ளனர்.
இந்நிலையில் போராடி வரும் ஆசிரியை ஒருவர் பேசுகையில் “அரசு தாமதித்தால் எங்களுடைய உண்ணாவிரதம் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு, ஆசிரியர்கள் நிலை மோசமாகும். அரசு இதில் தலையிட்டு, எங்களுடைய ஒற்றை கோரிக்கையான சம வேலைக்கு சம ஊதியம் என்பதை அமலுக்கு கொண்டு வர அரசாணை பிறப்பிக்க வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் தொடரும்” என்று கூறியுள்ளார்.
கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை அழைத்து பேசி சுமூக தீர்வை கொண்டு வர வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். மேலும் ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றி உண்ணாவிரத போராட்டத்தை தமிழக அரசு முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“