சென்னைக்கு வருகின்ற ஏப்ரல் 8ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி வருகைத்தருகிறார்.
சென்னை மீனம்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய விமான முனையம் திறப்பு விழா மற்றும் சென்னையில் இருந்து கோவை வரை இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் சேவை ஆகியவற்றை தொடங்கிவைக்க வருகைதருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தனி விமானத்தில் ஹைதராபாத் பேகம்பேட் விமான நிலையத்தில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு பிற்பகல் 2.45 மணிக்கு பிரதமர் பயணிக்கிறார்.
அங்கு வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும், சென்னை விமான நிலையத்தில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த விமான முனையத்தைப் பார்வையிடுகிறார்.
பின்னர், அங்கிருந்து இந்திய விமானப் படை ஹெலிகாப்டர் மூலம், நேப்பியர் பாலம் அருகில் உள்ள ‘ஐ.என்.எஸ்., அடையாறு' கப்பல் படைத் தளத்திற்கு வருகைதருகிறார். மேலும், அங்கிருந்து கார் மூலம், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் சென்று, சென்னை-கோவை இடையிலான ‘வந்தே பாரத்’ அதிவிரைவு ரயில் சேவையைக் தொடங்கிவைக்கிறார்.
தொடர்ந்து, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கார் மூலம் மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணா மடத்துக்குச் சென்று, அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
பின்னர், விமானப் படை ஹெலிகாப்டர் மூலமாக, பல்லாவரத்தில் உள்ள ராணுவ மைதானத்துக்குச் செல்கிறார்.
மேலும், சென்னை விமான நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அதிநவீன முனையத்தை திறந்து வைக்கிறார்.
பின்னர், அங்கிருந்து சென்னை பழைய விமான நிலையம் வரும் பிரதமருக்கு வழியனுப்பும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. தொடர்ந்து, பிரதமர் மோடி இரவு 8.45 மணியளவில் தனி விமானத்தில் புறப்பட்டு, கர்நாடகா மாநிலம் மைசூரு செல்கிறார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil