சொத்து குவிப்பு வழக்கு; முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு ஐகோர்ட் கண்டனம்

Property accumulation case; High Court condemns former minister Rajendra Balaji: சொத்து குவிப்பு வழக்கில் தொடர்ந்து வாய்தா கேட்ட, அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு, சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம்

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கில், அவர் தொடர்ந்து ஆஜரகாமல் இருந்ததால், சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தல்லாகுளத்தைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் 2011 முதல் 2013 ஆம் ஆண்டு வரை ராஜேந்திர பாலாஜி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், வருமானத்திற்கு அதிகமாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, 7 கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் சேர்க்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநராயணன் மற்றும் ஹேமலதா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் கடந்த மார்ச் மாதம் தீர்ப்பு வழங்கியிருந்தது. இந்த தீர்ப்பில், நீதிபதி சத்தியநாராயணன், சொத்து குவிப்பு புகார் குறித்து அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்டார்.

ஆனால், மற்றொரு நீதிபதியான ஹேமலதா அடுத்ததாக தீர்ப்பை வாசிக்கும்போது, நீண்ட இடைவெளிக்கு பிறகு வழக்கு பதிவு செய்து விசாரிப்பது தேவையற்றது. செத்த குதிரையின் மீது சவுக்கடி கொடுப்பது போன்றது என்றும் மேற்கொண்டு விசாரிப்பதால் எவ்வித பலனும் இல்லை என்றும் கூறி, வழக்கை தள்ளுபடி செய்வதார்.

இந்த மாறுபட்ட தீர்ப்பால், வழக்கை விசாரிக்கும் மூன்றாவது நீதிபதியாக எம்.நிர்மல்குமார் கடந்த ஜூன் மாத இறுதியில், நியமிக்கப்பட்டார். கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, ராஜேந்திர பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இரு நீதிபதிகள் அமர்வின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதால், வழக்கு விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். ஆனால் லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர், ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு புகாரில் விடுபட்ட ஆவணங்களை திரட்டி வருவதாகவும், அதன் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறினார். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, காவல் துறை தொடர்ந்து விசாரணை நடத்த எந்த தடையும் இல்லை என கூறி, வழக்கை ஆகஸ்ட் 19 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். 

இதற்கிடையில், இந்த வழக்கு விசாரணைக்கு தடைகோரியும், 3 ஆவது நீதிபதிக்கு வழக்கு மாற்றப்பட்டதை எதிர்த்தும், ராஜேந்திர பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், விதிகளின்படி மாறுபட்ட தீர்ப்பு வழங்கும் போது அதற்குரிய காரணங்களை விளக்கமாக நீதிபதிகள் தெரிவிக்க வேண்டும் என்றும், அவ்வாறு விளக்கம் அளித்தால் மட்டுமே 3 ஆவது நீதிபதி விசாரிக்க முடியும். எனவே இந்த விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். 

இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருப்பதால், இந்த வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்று ராஜேந்திர பாலாஜி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. 

இதற்கு லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்த வழக்கை விசாரணைக்கு எடுக்கக் கூடாது என்ற உள்நோக்கத்துடனேயே பிழைகள் கொண்ட மனுவை உச்ச நீதிமன்றத்தில் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளதாக குறிப்பிட்டார். எனவே இந்த வழக்கை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அவர் வாதிட்டார். 

இதையடுத்து ராஜேந்திர பாலாஜி தரப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி, இந்த வழக்கில் இனி வாய்தா கேட்க கூடாது என்றும் ராஜேந்திர பாலாஜியின் மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாவிட்டால், அடுத்த விசாரணையின் போது இந்த வழக்கில் அரசு தரப்பு வாதங்கள் கேட்கப்படும் என்றும் தெரிவித்து, வழக்கு விசாரணையை செப்டம்பர் 1 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Property accumulation case high court condemns former minister rajendra balaji

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com