சென்னை எண்ணூரில் செயல்பட்டு வரும் கோரமண்டல் உர ஆலையை மூட வலியுறுத்தி எண்ணூர் ஆதரவுக் குழு சார்பில் சூழியல் நீதிக்கான மனித சங்கிலி போராட்டம் இன்று (மார்ச் 3)நடைபெற்றது. சென்னை பெசன்ட் நகரில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் 400-க்கும் மேற்பட்ட பொது மக்கள், கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை எண்ணூர் பெரியகுப்பம் அருகே விரைவு சாலையில் கோரமண்டல் உர ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலைக்கு தேவையான ரசாயனங்கள் வெளிநாடுகளில் இருந்து கப்பல் மூலம் இறக்குமதி செய்யப்படுகிறது.
அந்த வகையில் கடந்த 26-ம் தேதி கப்பலில் இருந்து குழாய் மூலம் திரவ அமோனியா எடுத்துச் சென்ற போது குழாயில் உடைப்பு ஏற்பட்டு அமோனியா கசிவு ஏற்பட்டது. இதனால் பெரிய குப்பம், சின்னக்குப்பம் உள்ளிட்ட கிராமங்களில் காற்றில் வாயு கலந்ததால் மக்களுக்கு கண் எரிச்சல், வாந்தி, மூச்சுத் திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில், ஆலையை தற்காலிகமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது. தொடர்ந்து பொதுமக்கள் நிரந்தரமாக மூட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று எண்ணூர் ஆதரவுக் குழு சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“