/indian-express-tamil/media/media_files/2025/06/28/medico-issue-2025-06-28-18-10-26.jpg)
கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் காஷ்மீரைச் சேர்ந்த மாணவர் ஒருவரை தாடியை முழுமையாக எடுக்க வற்புறுத்தியதாக கூறி, இந்திய மாணவர் சங்கம் மற்றும் ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தனியார் மருத்துவக் கல்லூரியைக் கண்டித்து பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர்.
மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனுவில், "கோவை மாவட்டம், இந்தியாவின் கல்வித்துறையில் முக்கியப் பங்காற்றுகிறது. பல்வேறு மாநிலங்கள் மட்டுமின்றி, வெளிநாட்டு மாணவர்களும் இங்குப் பயின்று வருகின்றனர்.
காஷ்மீர் பள்ளத்தாக்கைச் சேர்ந்த டாக்டர் சுபைர் அகமதுக்கு, தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம் (NBEMS) நடத்திய NEET-SS தேர்வில் தேர்ச்சி பெற்று, இரண்டாவது கவுன்சிலிங் சுற்றின் மூலம் சிறுநீரகவியல் (நெப்ராலஜி) துறையில் உயர்கல்விக்கான இடம் KMCH மருத்துவக் கல்லூரியில் ஒதுக்கப்பட்டுள்ளது.
மாணவர் சுபைர் தனது சேர்க்கை நடைமுறைகளை முடிக்க கோவை KMCH மருத்துவக் கல்லூரிக்குச் சென்றபோது, கல்லூரி நிர்வாகம் அவரது தாடியை முழுமையாக எடுக்க வேண்டும் என்று கையெழுத்திட வற்புறுத்தியுள்ளது. அப்போது மாணவர் சுபைர், "நான் மருத்துவக் கல்வியின் அனைத்து நடைமுறைகளுக்கும் கட்டுப்படுகிறேன். தாடியை முக கவசம் கொண்டு மறைத்துக் கொள்கிறேன், தாடி எனது மத நம்பிக்கை சார்ந்தது" என்று கூறியுள்ளார். ஆனால், கல்லூரி நிர்வாகம் அவரது கோரிக்கையை பொருட்படுத்தாமல் மருத்துவ உயர்கல்விக்கான சேர்க்கையை மறுத்துள்ளது.
KMCH மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தின் இச்செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது. குறிப்பாக, இந்திய அரசியலமைப்புச் சட்டம் Article 21, குடிமக்களுக்கு தன் உடல் தோற்றம் குறித்த உரிமையை வழங்கியுள்ளது. மேலும், Article 25, ஒருவருக்கு பிடித்த மத வழிபாட்டு நம்பிக்கையைப் பின்பற்ற உரிமை அளித்துள்ளது. அவ்வாறு இருக்கையில், இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணான கல்லூரி விதிகளை KMCH கல்லூரி நிர்வாகம் ஏற்படுத்திக் கொண்டு மாணவனின் சேர்க்கையை மறுத்துள்ளது கண்டிக்கத்தக்கது. இதனால் மாணவர் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார்.
எனவே, மாவட்ட ஆட்சியர் தலையிட்டு, மாணவருக்கு ஒதுக்கப்பட்ட படிப்பை தொடர உறுதி செய்ய வேண்டும் அல்லது மாணவர் வேறொரு கல்லூரியில் படிப்பைத் தொடர மூன்றாம் கவுன்சிலிங் வாய்ப்பினைப் பயன்படுத்திக்கொள்ள உதவ வேண்டும். மேலும், இரண்டாம் கவுன்சிலிங் போது KMCH கல்லூரியில் செலுத்திய இரண்டு லட்சம் ரூபாய் முன் பணத்தைப் பெற்றுத்தர தேசிய மருத்துவ கவுன்சில் ஆணையத்திற்குத் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். இதற்கான அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும்" என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது மட்டுமின்றி, "கோவையில் பல கல்வி நிறுவனங்கள் தங்கள் லாப நோக்கத்திற்காக, இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணாக "ஒழுக்கம்" என்ற பெயரில் பல்வேறு விதிகளை உருவாக்கிச் செயல்பட்டு வருகின்றன. அவ்வாறு செயல்படும் கல்வி நிறுவனங்களின் விதிமுறைகளை ரத்து செய்ய வேண்டும்" எனவும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.