திருச்சியில் மாநகராட்சி பகுதிகளில் சாலைகள் சிதிலமடைந்து காணப்படுவதாகக் கூறி, நாற்று நடும் போராட்டம் நடைபெற்றது.
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட திருவெறும்பூர் 41 வது வார்டு பகுதிகளான காமராஜர் நகர், புற்றுக் கோயில் தெரு, சுருளி கோவில் தெரு, AR நகர், TR நகர் ஆகிய பகுதிகளில் சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இந்நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக தோண்டப்பட்ட சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
இப்பணிகளை விரைந்து முடித்து சாலைகளை சீரமைத்து தரக்கோரி அப்பகுதி மக்கள் மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை மனு அளித்துள்ளனர். ஆனால், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதைக் கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் இணைந்து நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறும் பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், சேதம் அடைந்த சாலைகளை சீரமைத்து தர வேண்டும், பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என பல கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
இது குறித்து தகவல் அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பாதாள சாக்கடை திட்டத்தின் ஒப்பந்த பணி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு கேள்வி எழுப்பினர்.
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிப்பதாகவும், குண்டும் குழியுமான சாலைகளை சீரமைத்து தருவதாகவும் உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
செய்தி - க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“