சென்னையில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி மற்றும் இயக்குனர் பா.ரஞ்சித் உள்பட 1500 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அனுமதியின்றி கூடுதல் உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5-ம் தேதி பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் முன் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
கடந்தாண்டு கொலை செய்யப்பட்ட ரவுடி ஆற்காடு சுரேஷின் கொலைக்குப் பழி வாங்கும் நோக்கில் ஆம்ஸ்ட்ராங் கொலை நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில், ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, கூட்டாளி திருவேங்கடம், அரசியல் கட்சியைச் சேர்ந்த பிரமுகர்கள், வக்கீல்கள் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், நேற்று (ஆக.9) ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி கேட்டும், உண்மை குற்றவாளிகளை கண்டறிய கோரியும் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளரான ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி முன்னிலை வகித்தார். மாநில தலைவர் ஆனந்தன் தலைமை தாங்கினார். மேலும் இந்த போராட்டத்தில் இயக்குனர் பா.ரஞ்சித் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி, இயக்குனர் பா.ரஞ்சித் உள்பட 1,500 பேர் மீது நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அனுமதியின்றி கூடுதல் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“