தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி மத்திய அரசுக்கு உச்சநீன்றம் தீர்ப்பளித்தது. கடந்த மார்ச் 16ம் தேதி இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்ற உத்தரவைப் பிறப்பித்திருந்தது.
கடந்த 29ம் தேதியுடன் இந்தக் காலக்கெடு முடிவடைந்த நிலையில் இன்று வரை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாதது தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கூடுதலாக 3 மாத கால அவகாசம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது. இது போன்ற மத்திய அரசின் அலட்சியத்தின் காரணமாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. இப்போராட்டத்தை, அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் மற்றும் மாணவர்கள் நடத்தி வருகின்றனர்.
மறியல் போராட்டம்:
கோவையின் பல்வேறு இடங்களில் ரயில் மறியல் மற்றும் சாலை மறியல் போராட்டங்கள் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர் பல இடங்களில் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- கோவையில் சிங்காநல்லூர் ரயில் நிலையத்தில் திமுக-வை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் ரயிலை மறித்து போராட்டம் நடத்தினர். பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்ட நிலையில் இந்த ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது என்று கூறப்படுகிறது.
-மேலும் கம்யூனிஸ்ட், மதிமுக மற்றும் விவசாயக்கட்சி சார்பாகவும் சாலை மறியல் போராட்டங்கள் நடைபெற்றது. குறிப்பாக ரயில் மறியலில் ஈடுபட்ட திமுக-வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த இரண்டு திமுகவினர், தீக்குளிக்க முயற்சி செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- சிவாநந்தபுரம் வாட்டர் டேங்க் அருகே நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 90க்கும் மேற்பட்டோர் கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- மேட்டுப்பாளையம் மற்றும் பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளிலும் திமுக-வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதே போல் நெல்லை, திருச்சி, புதுச்சேரி உட்பட பல்வேறு பகுதிகளில் ரயில் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
மாணவர்கள் போராட்டம்:
சென்னை மற்றும் பல்வேறு இடங்களில் மாணவர்கள் போராட்டத்தில் களமிறங்கினர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை போராட்டம் நடைபெறும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
- சென்னையில் மாநிலக் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். பின்னர் அனைத்து மாணவர்களும் வீதிக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டைப் போராடி பெற்றதுபோல் காவிரியையும் போராடிப் பெறுவோம் என்றனர்.
- குறிப்பாகக் காவிரி டெல்டா மாவட்டங்களில் மாணவர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்திற்கும்m விவசாயிகளுக்கும் நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
- திருவாரூரில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை சாஸ்திரி பவன் முற்றுகை:
சென்னையில் அமைந்து சாஸ்திரி பவனை மே 17 இயக்கத்தைச் சேர்ந்தோர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மே 17 என்னும் இயக்கத்தின் நிறுவர் திருமுருகன் காந்தியின் தலைமையில் இப்போராட்டம் நடைபெற்றது.
மத்திய அரசின் அலுவலகங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்ட நிலையிலும், இயக்கத்தைச் சார்ந்தோர் போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியும், சாஸ்திரி பவனின் ஹிந்தி பெயர் பலகையை உடைக்கவும் முயற்சித்தனர். மேலும் பலத்த போலீஸ் பாதுகாப்பை மீறி அவர்கள் சாஸ்திரி பவன் உள்ளே நுழைய முற்பட்டபோது கைது செய்யப்பட்டனர். இந்தப் போராட்டத்தில், “ தமிழகத்தில் மக்களைப் பாதிக்கும் திட்டத்திற்கு மட்டும் தமிழ் நாடு வேண்டும் ஆனால் நதி நீர் வழங்க மாட்டார்கள். மேலும் தமிழகத்தில் வரி வசூலிக்கும் தகுதி இனி மத்திய அரசுக்கு இல்லை” என்று திருமுருகன் காந்தி தெரிவித்தார்.
திரைக்கலைஞர்கள் கூட்டமைப்பு மறியல் போராட்டம்:
சென்னை வடபழனியில் திரைக்கலைஞர்கள் கூட்டமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். காவிரி விவகாரத்தில் தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டை அவர்கள் முன்வைத்தனர். மேலும் தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் உடனடியாக அளிக்க வேண்டும், நீயுட்ரினோ, ஸ்டெர்லைட் போன்ற திட்டங்கள் முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்றும் வலியுறுத்தி இப்போராட்டத்தை நடத்தினர்.
தமிழகம் முழுவதும் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், நாளை வணிகர் சங்கம் சார்பில் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.