தமிழக முன்னாள் முதல்வர், மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதி பற்றி நாம் தமிழர் கட்சியின் சாட்டை துரைமுருகன் மற்றும் சீமான் ஆகியோர் பாடல் பாடி கிண்டல் செய்தும், அவதூறு கருத்து தெரிவித்ததாகவும் தி.மு.கவினர் மற்றும் கூட்டணி கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியும் இதற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். இது அடாவடி சாதிய மனப்பான்மையின் வெளிப்பாடே என கடுமையாக தெரிவித்துள்ளார்.
டாக்டர் கிருஷ்ணசாமி வெளியிட்ட அறிக்கையில், "கலைஞர் கருணாநிதி அவர்களைப் பற்றி, அவதூறுப் பாடல் பாடிக் காட்டியவர்களின் மனோநிலை; அதன் தொனி, சாதாரண மனிதர்களின் தொனியல்ல! அடாவடி சாதிய மனப்பான்மையின் வெளிப்பாடே.!
கருத்துரிமை, பேச்சுரிமை என்ற பெயரில் மேடை நாகரிகங்கள் அறவே இன்றி, வாய்க்கு வந்ததை எல்லாம் பேசுவதும்; சமூகத்தைச் சீரழித்து வரும் சமூக வலைதளங்கள் எனும் நவீன தளங்களைப் பயன்படுத்தி, நாகரிகம் அடைய வேண்டிய ஒரு சமுதாயத்தைப் பின்னோக்கி தள்ளும் சிலரின் தீய எண்ணங்களும் மேலும் தளைத்திட அனுமதிக்கக் கூடாது.
கலைஞர் காலமாகி ஆறேழு வருடங்கள் ஆகிவிட்டன.தனது 44வது வயதில் 1969ம் ஆண்டில் அவர் தமிழகத்தின் முதலமைச்சர் ஆக தமிழகத்தில் முதன்முறையாகப் பதவி ஏற்றவர். அதற்குப் பிறகு, ஐந்து முறை முதலமைச்சர் பதவியிலிருந்திருக்கிறார். தேர்தலாக இருந்தாலும், அரசியல் பிரச்சனைகளாக இருந்தாலும், மக்களுடைய பிரச்சனைகளாக இருந்தாலும் எண்ணிய சில மணி நேரங்களிலேயே அல்லது ஓரிரு நாட்களிலேயே அது குறித்து அவரிடம் சென்று பேசுவதற்கு உண்டான ஆளுமை அவரிடத்திலே இருந்தது.
அதனால் தான் ஜாதி, வெறியும் மத வெறியும் இனவெறியும் ஒவ்வொருவரது அணுவிலேயும் ஊறிப் போய் இருக்கக்கூடிய தமிழகத்தில் ஐந்து முறை தமிழகத்தின் ஆட்சிக் கட்டிலிலிருந்திருக்கிறார். 60 ஆண்டு காலம் அரசியலில் நிலைத்திருந்திருக்கிறார். அவருடைய தவறான அரசியல் நடவடிக்கைகளை விமர்சிப்பதற்கு எத்தனையோ தளங்கள் உண்டு எத்தனையோ காரணிகள் உண்டு.
ஆனால் அவற்றையெல்லாம் விட்டுவிட்டு, அவர் மறைந்த ஆறேழு வருடங்களுக்குப் பிறகும், எப்பொழுதோ யாராலோ எதற்காகவோ புனையப்பட்ட அவதூறுப் பாடலை சம்பந்தமில்லாமல் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அவரைக் கொச்சைப்படுத்திட வேண்டும் என்ற குறுகிய நோக்கத்தில் பாடி காண்பிப்பதும், அதற்காக ஒருவர் மீது சட்ட நடவடிக்கைகள் பாயும் பொழுது.
அதை நாகரீகமாக, சட்டப் பூர்வமாக எதிர்கொள்வதற்குப் பதிலாக அதே வார்த்தையைத் திரும்பச் சொல்லி, முடிந்தால் நடவடிக்கை எடுத்துப் பார் என்று சொல்வதெல்லாம் அரசியலாகத் தெரியவில்லை. சாதிய ஆணவத்தின் இன்னொரு வடிவமாகவே பார்க்க வேண்டி இருக்கிறது. பாடிக் காட்டியவர்களின் மனோநிலை, அந்த பாடல் வரிகளின் பொருள், பாடியவர்களின் தொனி, அதை ஆதரித்தவர்களின் தொனி என அனைத்தும் சாதாரண மனிதர்களின் தொனியாக தெரியவில்லை. அடாவடி சாதிய மனப்பான்மையின் வெளிப்பாடாகத் தெரிகிறது. கண்டிக்க மனமுடையோர் கண்டிக்கலாம், கடந்து செல்லக் கூடியவர்கள் கடந்து செல்லலாம். ஆனால், நியாயப்படுத்த மட்டும் முயல்வது, நியாயமாகாது" எனக் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“